ஒமைக்ரான் பாதிப்பை 2 மணி நேரத்தில் கண்டு பிடிக்கும் பரிசோதனை கருவி - ஐ.சி.எம்.ஆர் உருவாக்கியுள்ளது
ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பதை 2 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிபுணர்கள் உருவாக்கி உள்ளனர்.
புதுடெல்லி,
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கொரோனா தொற்று உறுதியாகும் நபர்களின் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு ஒமைக்ரான் தொற்று உள்ளதா? என்று கண்டறியப்படுகிறது. இதன் பரிசோதனை முடிவுகள் வர பல மணி நேரம் ஆகிறது.
இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பதை 2 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிபுணர்கள் உருவாக்கி உள்ளனர். இந்த கருவியை வட கிழக்கு பிராந்தியத்திற்கான பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த டாக்டர் பிஸ்வஜோதி போர்க்காகோட்டி தலைமையிலான விஞ்ஞானிக்குழு உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் ஒரு நபரின் மாதிரியில் இருந்து 2 மணி நேரத்தில் ஒமைக்ரான் தொற்று இருக்கிறதா? என்பதை கண்டறிய முடியும்.
இது குறித்து டாக்டர் பிஸ்வஜோதி கூறியதாவது:-
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், பிராந்திய ஆராய்ச்சி மையம் இணைந்து ஒமைக்ரான் மாறுபாட்டை கண்டறியவதற்காக நீர் பகுப்பாய்வு அடிப்படையில் பரிசோதனை கருவியை வடிவமைத்து உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை 2 மணி நேரத்தில் கண்டறிய முடியும்.
தற்போது வரை பரிசோதனை முடிவுக்கு குறைந்த பட்சம் 36 மணி நேரம் ஆகிறது. ஒமைக்ரான் மாறுபாட்டை கண்டறிய முழு மரபணு வரிசை முறைக்கு 4 முதல் 5 நாட்கள் வரை தேவைப்படுகிறது.
ஒமைக்ரான் மாறுபாட்டின் குறிப்பிட்ட செயற்கை மரபணுக்களுக்கு எதிராக ஸ்பைக் புரதத்தின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் பரிசோதனை கருவி மூலம் சோதிக்கப்பட்டது. இந்த சோதனை நூறு சதவீதம் துல்லியமானது என்பதை காட்டியது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story