புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி? தமிழிசை சவுந்தரராஜன் பதில்


புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி? தமிழிசை சவுந்தரராஜன் பதில்
x
தினத்தந்தி 12 Dec 2021 3:51 PM IST (Updated: 12 Dec 2021 3:51 PM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரான் வகை கொரோனா பரவும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை ஆயிரத்து 877 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை புதுச்சேரியில் குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து கொரோனா தொற்றில் பாதிப்பைக் குறைக்க தடுப்பூசி கட்டாயமாகச் செலுத்த வேண்டும் என்று புதுச்சேரியில் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுவையில் 2-வது தவணை உட்பட 13 லட்சத்து 6 ஆயிரத்து 706 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தை 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்றுவதற்கும், ஒமைக்ரான் பரவலைத் தடுப்பதற்கும் சுகாதாரத்துறை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஞாயிற்றுக்கிழமை என்று கூடப் பார்க்காமல் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியாற்றி வருகிறார்கள். பொதுமக்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொது இடங்களுக்கு வருவோருக்கு இன்று முதல் தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்கள் அவ்வப்போது பரிசோதனை செய்யப்படலாம்.  ஆகவே, பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு ஆவணத்தைத் தங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும். 

ஒமிக்ரான் வகை கொரோனா பரவும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

Next Story