வங்கி வைப்புத்தொகை காப்பீடு திட்டம்: வங்கி கணக்குகளுக்கு முழுமையான பாதுகாப்பு!
‘வங்கி வைப்புத்தொகை காப்பீடு திட்டம்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று நடைபெற்ற ‘வங்கி வைப்புத்தொகை காப்பீடு திட்டம்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினர்.
‘டெபாசிட் தொகை வைத்திருப்போர் முதலில்;ரூ.5 லட்சம் வரையிலான உத்தரவாதமான டெபாசிட் காப்பீடு தொகை’ என்னும் தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரதமர் மோடி தனது உரையில் பேசியதாவது,
“பா.ஜ.க.வின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிதி அமைப்பை மேம்படுத்தி உள்ளது.கடந்த ஆட்சிக்காலங்களில் வங்கி நெருக்கடி ஏற்பட்டு நடுத்தர மற்றும் ஏழை வகுப்பினர் மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக, பிரச்சினைகளை கம்பளத்தின் கீழ் நழுவவிடும் மனோபாவம் நம் நாட்டில் நிலவியது.
ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்பெற்றுள்ளனர்.
இந்த காப்பீடு திட்டம் மூலம், வங்கிகள் திவாலானால் 3 மாதங்களில் பணம் திரும்பக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரூ.1300 கோடி மேல் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த ஒரு லட்சம் டெபாசிட்தாரர்களின் பணத்தை டெபாசிட்தாரர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.
இதன்மூலம், புதிய இந்தியாவில் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படுகிறது.மத்திய அரசின் நடவடிக்கையால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு அவர் பேசினார்.
ஒரு வங்கியில் ஒரு டெபாசிட்தாரருக்கு ரூ. 5 லட்சம் டெபாசிட் காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், வங்கிக்கணக்குகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு உள்ளன.
முந்தைய நிதியாண்டின் முடிவில், முழுமையாக பாதுகாக்கப்பட்ட வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கை 98.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், வங்கி டெபாசிட் காப்பீடு தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story