புதுடெல்லி,
சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் 11ம் தேதி(சனிக்கிழமை) நடைபெற்ற 10ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில், பெண் வெறுப்பு தொடர்பான சர்ச்சைக்குரிய வாக்கியங்கள் ஒரு வினாவாக கேட்கப்பட்டிருந்தது கண்டனத்தை பெற்றுள்ளது.
அந்த வினாவில் பிற்போக்கான பெண் வெறுப்பு சம்பந்தப்பட்ட கருத்துக்கள் இடம்பெற்றது அனைவரது கண்டனத்தையும் பெற்றுள்ளது.
அந்த சர்ச்சைக்குரிய கேள்வி ஒரு பெரிய சொற்றொடராக இடம்பெற்றிருந்தது. அந்த வாக்கியத்தில், ‘மனைவிகள் தங்கள் கணவருக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள், அதுவே குழந்தைகள் மற்றும் வேலைக்காரர்கள் ஒழுக்கமின்மைக்கு முக்கியக் காரணம்’,
‘மனைவியின் விடுதலை குழந்தைகளின் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிட்டது.பெண் விடுதலை குழந்தைகளிடையே ஒழுக்கமின்மைக்கு வழிவகுத்தது’,
‘சமூக பிரச்சினைகளுக்கு பெண்களின் விடுதலை தான் காரணம்’, மேலும், இதுபோன்ற சர்ச்சைக்குரிய வாக்கியங்கள் இடம்பெற்றிருந்தன.
அந்த கேள்விக்கான விடைகளுள் ஒன்றாக, ‘எழுத்தாளர் ஒரு ஆண் பேரினவாத நபர்’ என்று கொடுக்கப்பட்டிருந்தது. இன்னொரு விடையாக ‘எழுத்தாளர் வாழ்க்கையை இலகுவாக அணுகுகிறார்’ என்ற விடை கொடுக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் இவற்றில் சரியான விடையை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுகொள்ளப்பட்டிருந்தனர்.
இத்தகைய கருத்துக்கள் பள்ளி மாணவர்களின் கேள்வித்தாளில் கேட்கப்பட்டிருந்தது ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில்,
“நம்பவே முடியவில்லை! நாம் உண்மையில் குழந்தைகளுக்கு இவற்றை தான் கற்றுக்கொடுக்கிறோமா? பெண்கள் மீதான இந்த பிற்போக்குத்தனமான கருத்துக்களை பாஜக அரசு ஆமோதிக்கிறது என்பது தெளிவாகிறது” என்று பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான தேர்வுத்தாளில் இந்த சர்ச்சைக்குரிய வினா இடம்பெற்றதற்கு சிபிஎஸ்இ நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. வாரியத்தின் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி இந்த விவகாரம் தொடர்பாக பாடக்குழு வல்லுநர்களிடம் ஆய்வு செய்ய ஒப்படைக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சிபிஎஸ்இ 12ம் வகுப்பு சமூகவியல் பாடத் தேர்வில், ‘குஜராத்தில் 2002ம் ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, எந்த அரசியல் கட்சி ஆட்சி செய்யும் போது நடைபெற்றது?’ என்ற சர்ச்சைக்குரிய வினா இடம்பெற்று பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் லட்சுமி ராமச்சந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து தெரிவித்திருப்பதாவது,
“இந்த மூர்க்கத்தனமான முட்டாள்தனமான வாக்கியம் வினத்தாளில் இடம்பெற்றுள்ளது. நாம் நம் குழந்தைகளுக்கு என்ன கற்பிக்கிறோம்? சிபிஎஸ்இ இதற்கு விளக்கம் அளித்து எங்கள் குழந்தைகளை இழிவுபடுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இத்தகைய பிற்போக்கு சிந்தனைகள் 21ஆம் நூற்றாண்டில் இடம் பெறக்கூடாது” என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
டுவிட்டரில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.