கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா..!


கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா..!
x
தினத்தந்தி 14 Dec 2021 8:05 AM GMT (Updated: 14 Dec 2021 8:05 AM GMT)

இந்தியாவில் மாதம் ஒன்றுக்கு 31 கோடி கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய உலக பேரவை கூட்டம் துபாயில் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரம், குடும்பநலம் மற்றும் ரசாயனம், உரத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பேசியதாவது,

“இந்திய உலக பேரவை கூட்டமானது, உலக அளவிலான முதலீட்டாளர்கள், வர்த்தக தலைவர்கள் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் தனிநபர் முதலீடுகளையும் வளர்ச்சிப்பாதையில் ஊக்குவிப்பதாக உள்ளது. 

இந்தியாவில் மாதம் ஒன்றுக்கு 31 கோடி கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலக அளவிலும் தடுப்பூசி மருந்துகளை அளிக்கும் அளவிற்கு உற்பத்தி உள்ளது.

தடுப்பூசி உற்பத்தி துறையில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது.இரண்டு இந்திய நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செய்தது மட்டுமின்றி, தடுப்பூசிகளின் உற்பத்தியையும் உள்நாட்டிலேயே செய்துள்ளன.

இந்தியாவின் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 86 சதவீதம் பேர்  முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்,  55 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் பெற்றுள்ளனர்.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான நர்சுகள், டாக்டர்கள் மற்றும் மருந்தாளுனர்களை உருவாக்கும் நாடாக இந்தியா உள்ளது. மேலும் இந்தியாவின் மருத்துவ சந்தையின் வர்த்தகம் வருகிற 2025-ம் ஆண்டில் 5 ஆயிரம் கோடி டாலர் மதிப்பை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 15 லட்சம் சுகாதாரம் மற்றும் நல மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது. டிஜிட்டல் தளத்தில் இதுவரை இந்தியா சார்பில் 8 கோடி தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் நடுத்தர வர்க்கம் விரிவடைந்து வருகிறது.இதன் காரணமாக நுகர்வு சக்தி அதிகரித்து வருகிறது.

‘புதிய தற்சார்பு இந்தியா’ என்ற கருப்பொருளுடன் நடைபெறும் இந்திய உலக பேரவை கூட்டம், ‘ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம்’ எனும் கொள்கையையும், இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் வெளிக்காட்டுகிறது.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story