குரூப் கேப்டன் வருண் சிங் உடல் நாளை போபால் கொண்டு செல்லப்படுகிறது


குரூப் கேப்டன் வருண் சிங் உடல் நாளை போபால் கொண்டு செல்லப்படுகிறது
x
தினத்தந்தி 15 Dec 2021 9:46 PM IST (Updated: 15 Dec 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

குரூப் கேப்டன் வருண் சிங் உடல் நாளை இந்திய விமானப்படை விமானம் மூலம் நாளை போபால் கொண்டு செல்லப்படும் என இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பெங்களூரு, 

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், குரூப் கேப்டன் வருண்சிங் உள்பட 14 பேர், கடந்த 8-ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள கோவை சூளூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றனர். 

அப்போது குன்னூர் அருகே சென்றபோது, அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அது கீழே விழுந்து தீப்பிடித்ததில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். குரூப் கேப்டன் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு குன்னூர் வெலிங்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல்-சிகிச்சைக்காக மறுநாள் 9-ந் தேதி அவர் விமானத்தில் பெங்களூரு அழைத்து வரப்பட்டார். இங்குள்ள கமாண்டோ ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகளை பொருத்தி அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

 அவருக்கு உடலில் 80 சதவீதம் அளவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதால், அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை வருண்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக விமானப்படை அறிவித்தது. இதன் மூலம் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் மரணம் அடைந்துவிட்டனர். ஹெலிகாப்டரில் பயணித்த அனைவருமே உயிரிழந்ததால் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் உடல் நாளை இந்திய விமானப்படை மூலம் நாளை போபால் கொண்டு செல்லப்படும் என இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வருண் சிங் உடலுக்கு இறுதிச்சடங்குகள் வரும் 17 ஆம் தேதி நடைபெறும் எனவும் விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


Next Story