அரசியலில் இருந்து விலகுவதாக மெட்ரோமேன் ஸ்ரீதரன் அறிவிப்பு
கேரளாவில் அரசியலில் இருந்து விலகுவதாக மெட்ரோமேன் ஸ்ரீதரன் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
மெட்ரோமேன் என அதிரடியாக அழைக்கப்படும் ஸ்ரீதரன், கேரள மாநில சட்டசபை தேர்தலுக்கு முன் பாஜக வில் இணைந்தார். டெல்லி மெட்ரோவின் முன்னாள் தலைவரான இவர், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் கொச்சி மெட்ரோ ரெயில் திட்டங்களில் மூத்த பொறியாளராக பணியாற்றி உள்ளார். கொங்கன் ரெயில் திட்டத்தில் இவரின் பங்கு முக்கியமானது. பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் பெற்றவர். சட்டசபை தேர்தலில் பாஜக முதல்-மந்திரி வேட்பாளராக களமிறங்கிய அவர் பாலக்காடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில், நிருபர்களை சந்தித்த ஸ்ரீதரன் கூறியதாவது:
90 வயதை நெருங்கிவிட்டேன் என பலருக்கும் தெரியவில்லை. அரசியலில் இருந்து விலகுகிறேன். அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவது ஆபத்தானது என கருதுகிறேன். அரசியலில் எனக்கென எந்த கனவும் இல்லை. எனது மண்ணிற்கு சேவை செய்ய அரசியல் தேவையில்லை. 3 டிரஸ்ட்கள் மூலம் அதை செய்து வருகிறேன்.
தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போது வருத்தம் ஏற்பட்டது. அது முக்கியம் அல்ல. அதற்கான நேரமும் முடிந்துவிட்டது. நான் வெற்றி பெற்றிருந்தால் எம்.எல்.ஏ., ஆக மட்டுமே இருந்திருப்பேன். ஆனால், ஒரு எம்.எல்.ஏ.,வால் ஏதும் அதிகம் செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்ட பின் தற்போது வருத்தமில்லை. நான் அரசியல் வாதி கிடையாது. அரசியலில் இருந்து விலகுகிறேன். அரசியலில் இருந்து விலகினாலும் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த கேரள சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தவர் மெட்ரோமேன் ஸ்ரீதரன் என்பது குறிப்பிடதக்கது.
Related Tags :
Next Story