குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: குரூப் கேப்டன் வருண்சிங் உடல் இன்று தகனம்


குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: குரூப் கேப்டன் வருண்சிங் உடல் இன்று தகனம்
x
தினத்தந்தி 17 Dec 2021 8:49 AM IST (Updated: 17 Dec 2021 8:49 AM IST)
t-max-icont-min-icon

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் போபாலில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.

போபால்,

நீலகிரி மாவட்டம் கடந்த 8-ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் என 13 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் தொடர்ந்து  கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல்  வருண்சிங்  நேற்று முன்தினம் உயிர் இறந்தார்.

வீரமரணம் அடைந்த வருண் சிங்கின் உடல் நேற்று  காலை பெங்களூருவில் உள்ள எலகங்கா விமானப்படை தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். 

விமானப்படை சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதையடுத்து அவரது உடல் நேற்று காலை 10 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டது. மதியம் 3 மணிக்கு அவரது உடல் போபாலை சென்று அடைந்தது. அங்கு அவரது குடும்பத்தினர் உட்பட பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

Next Story