சீக்கிய கொடியை அவமதிக்க முயன்றதாக பஞ்சாபில் மேலும் ஒருவர் அடித்துக்கொலை
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், பொற்கோயில் சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ளது சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயில். இங்கு புனித நூலான குரு கிரந்த் சாஹிப் மற்றும் புனித வாள் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த போது , மர்ம நபர் ஒருவர் பொற்கோயிலின் கர்ப்பகிரஹமாகக்க் கருதப்படும் புனித நூலும், வாளும் உள்ள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் அங்கிருந்த சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் மற்றும் புனித வாளையும் கைப்பற்ற முயன்றதாகவும் தெரிகிறது. அவரைத் தடுத்து நிறுத்திய அங்கிருந்தவர்கள் அந்த மர்ம நபரை வெளியே இழுத்துவந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அந்த நபர் உயிரிழந்தார். இந்தக் காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இன்று சீக்கிய மதக்கொடியை அவமதிக்க முயற்சித்ததாக நிஜாம்பூர் கிராம மக்கள் ஒருவரை பிடித்து கடுமையாக தாக்க துவங்கினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து, அந்த நபரை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அப்போது, போலீசாருக்கும், அங்கிருந்தவர்களுக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில், அந்த நபரை உள்ளூர் மக்கள் அடித்து கொன்றனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், பொற்கோயில் சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story