ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம்


ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம்
x
தினத்தந்தி 20 Dec 2021 12:37 AM IST (Updated: 20 Dec 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது.

ஸ்ரீகாளஹஸ்தி,

தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. சிவனின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு அதிகாலை 3 மணிக்கு நான்கு மாட வீதிகளில் கோவில் மணி ஒலித்தபடி வலம் வருதல், 3.30 மணிக்கு மங்கள வாத்தியங்கள், 3.45 மணிக்கு திருமஞ்சன சேவை, அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை, பள்ளியறை பூஜை, தேவார பாடல்கள் பாராயணம் செய்யப்படுகிறது. 4.30 மணிக்கு முதல் கால அபிஷேகம் பக்தர்களுக்கு அனுமதி இன்றி கோவில் சார்பாக நடத்தப்படுகிறது. காலை 6 மணிக்கு லிங்கோத்பவ கால அபிஷேகம் (ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மூலவருக்கு மட்டும்) காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை கோவில் வளாகத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது.

அதைத்தொடர்ந்து நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. உற்சவர் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். காலை 7.30 மணிக்கு துணை சன்னதிகளில் நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு கவுரியம்மன் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். உற்சவர்களான ஸ்ரீஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. தாயார் சன்னதி எதிரில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு ஊஞ்சல் சேவை, காலை 10 மணிக்கு 3-ம் கால அபிஷேகம் வெந்நீரால் செய்யப்படுகிறது.

மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு மதியம் 2 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு பிரதோஷ கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஹரிகட்லா உற்சவம், ஏகாந்த சேவையின்றி ‌இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

Next Story