நீதித்துறை உள்கட்டமைப்பு விவகாரம்: மத்திய அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வருத்தம்
தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு கழகம் அமைத்தல் உள்ளிட்ட சில பிரச்சினைகளில் மத்திய அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தத்துடன் தெரிவித்தார்.
வாராங்கல்,
தெலுங்கானா மாநிலம் வாராங்கலில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள கோர்ட்டு வளாகத்தை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று திறந்து வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-
நீதித்துறையை பொறுத்தவரை நாட்டில் 3 முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அவை அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை, நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் தகுதிவாய்ந்த வக்கீல்களுக்கு நிதியுதவி அளித்தல் ஆகியவை ஆகும்.
வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதற்கு நீதிபதிகள் பற்றாக்குறை மட்டும் காரணமல்ல. மாறாக உள்கட்டமைப்பு வசதிகளும் வேண்டும். தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யாமல், பாழடைந்த நீதிமன்ற கட்டிடங்களில் நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் அமர்ந்து நீதி வழங்குவது அழகல்ல. இதை அரசுகள், குறிப்பாக மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த வக்கீல்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என மத்திய அரசை நான் கேட்டேன். ஆனால் இதுவரை சரியான பதில் இல்லை. இதைப்போல உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு கழகத்தை உருவாக்க வேண்டும் என்று கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் இதுவரை பதில் இல்லை.
பிரதமர் மற்றும் ஜனாதிபதி பங்கேற்கும் பல்வேறு மன்றங்களில் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இந்த பிரச்சினைகளை நான் எழுப்பி இருக்கிேறன். நகரங்கள் மற்றும் பெருநகரங்களை சேர்ந்த வக்கீல்கள் இந்த கொரோனா காலகட்டத்தில் காணொலி மூலம் தங்கள் கோர்ட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதைப்போல கிராமப்புறங்களை சேர்ந்த வக்கீல்களும் காணொலி மூலம் கோர்ட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க வசதியாக நடமாடும் இணைய சேவையை வாகனங்கள் மூலம் கிராமங்களில் ஏற்படுத்துமாறு சட்ட மந்திரிக்கு கடிதம் எழுதினேன்.
தேவைப்பட்டால், கார்பரேட் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் நெட்வொர்க் நிலையங்களை அமைக்க பெரிய நிறுவனங்களை அரசு இணைக்க முடியும். இதனால் வக்கீல்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ள முடியும். இந்த பரிந்துரை இதுவரை செயல்பாட்டில் இல்லை. இதற்கு அரசு ஏதாவது செய்யும் என்று காத்திருக்கிறேன்.
இவ்வாறு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.
Related Tags :
Next Story