கொல்கத்தா மாநகராட்சி தேர்தல்: நாளை ஓட்டு எண்ணிக்கை
கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் 63 சதவீத வாக்குப்பதிவானது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய சட்டசபை தேர்தலும், முதல்-மந்திரி பதவியை மம்தா பானர்ஜி தக்க வைத்துக்கொள்ள நடந்த பவானிப்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் நடந்து சில மாதங்களே ஆன நிலையில், கொல்கத்தா மாநாகராட்சி தேர்தல் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநகராட்சியின் பதவிக்காலம் ஒன்றரை ஆண்டுக்கு முன்பாக (கடந்த ஆண்டு மே) முடிந்தபோதும் கொரோனா பரவலால் தேர்தல் தாமதமாக அறிவிக்கப்பட்டது.
144 வார்டுகளைக் கொண்ட கொல்கத்தா மாநகராட்சிக்கு டிசம்பர் 19-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இந்த மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறப்போவது நீயா, நானா என்கிற போட்டி மாநிலத்தை ஆளும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வுக்கும் இடையே ஏற்பட்டுள்ளது. இந்த கட்சிகளுக்கு மத்தியில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளும் களத்தில் உள்ளன.
2010-ம் ஆண்டு முதல் தன் வசம் வைத்திருக்கிற கொல்கத்தா மாநகராட்சியை தொடர்ந்து 3-வது முறையாக வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டியது. மாநகராட்சியை கைப்பற்றாவிட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூ. தலைமையிலான இடதுசாரி கூட்டணியை பின்னுக்குத்தள்ளி 2-ம் இடத்தையாவது கைப்பற்றி விட வேண்டும் என்று பா.ஜ.க. கங்கணம் கட்டி களத்தில் இறங்கி உள்ளது.
அங்கு தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்காக மாநகராட்சி பகுதிகளில் 23 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் 40 லட்சத்து 48 ஆயிரத்து 357 வாக்காளர்கள் உள்ளனர். 144 வார்டுகளில் 4,949 வாக்குச்சாவடிகளில் கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
காலையில் மிகுந்த குளிர்காற்று சில்லென்று வீசியதால் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. காலை 9 மணி வரை 10.86 சதவீத வாக்குகளே பதிவாகின. பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக விறுவிறுப்பு அடைந்தது. நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியதைப் பார்க்க முடிந்தது.
ஆங்காங்கே வன்முறை சம்பவங்களுக்கும் குறைவில்லை. சீல்டா, கன்னா பகுதிகளில் 2 நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதில் 3 வாக்காளர்கள் காயம் அடைந்தனர். 3 பேரில் ஒருவர் தனது கால்களில் ஒன்றை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. 22-வது வார்டில் பா.ஜ.க. கவுன்சிலர் மைனா தேவி புரோகித் தன்னை மம்தா கட்சியினர் தாக்கியதாக குற்றம் சாட்டினார்.
திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் தங்கள் வேட்பாளர்களும் ஏஜெண்டுகளும் தாக்கப்பட்டதாக பா.ஜ.க. மற்றும் இடதுசாரி கூட்டணி குற்றம் சாட்டியது. மாநகரின் தென்பகுதியில் பாகா ஜதின் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர்களும், தொண்டர்களும் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தினர். சில போலீஸ் நிலையங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்களும் நடத்தினர்.
தேர்தல் முடிந்ததும் பா.ஜ.க. வேட்பாளர் ஒருவரது மனைவியை அவரது 8 வயது மகள் முன்னிலையில் கற்பழித்து கொல்வோம் என திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு விஷமிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக மேற்கு வங்காள பா.ஜ.க. சமூக ஊடக பொறுப்பாளர் மாளவியா புகார் தெரிவித்துள்ளார். தேர்தலில் மோசடிகள் நடந்துள்ளதாக பா.ஜ.க.வினர் பல இடங்களிலும் போராட்டங்கள் நடத்தினர்.
முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பிற்பகல் 3.30 மணிக்கு தெற்கு கொல்கத்தாவில் உள்ள மித்ரா இன்ஸ்டிடியூசன் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். தேர்தல் தொடர்பான வன்முறையில் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இணை போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். கவர்னர் ஜகதீப் தாங்கர், தான் வாக்கு அளிக்க சென்றபோது தனது பாதுகாவலர்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே நின்றிருந்ததாக குறிப்பிட்டார்.
மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவுக்கு வந்தது. அப்போது 63.37 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநகராட்சி தேர்தலில் நாளை (21-ந்தேதி) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Related Tags :
Next Story