திருமணத்திற்கு அவகாசம் கேட்டதால் காதலி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை - தற்கொலைக்கு முயன்ற காதலனும் உயிரிழப்பு


திருமணத்திற்கு அவகாசம் கேட்டதால் காதலி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை - தற்கொலைக்கு முயன்ற காதலனும் உயிரிழப்பு
x
தினத்தந்தி 20 Dec 2021 9:12 PM IST (Updated: 20 Dec 2021 9:12 PM IST)
t-max-icont-min-icon

திருமணத்திற்கு பெற்றோர் அவகாசம் கேட்டதால் காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற நபர் தீக்காயங்களால் உயிரிழந்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தைக்கொடி கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (30). இவரும் அதேபகுதியை சேர்ந்த கிருஷ்ண பிரியாவும் (23) கடந்த 4 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நந்தகுமார் கட்டிட தொழிலாளியாவர். அவரும் கிருஷ்ண பிரியாவும் காதலித்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த 9-ம் தேதி கிருஷ்ண பிரியா தைக்கொடி பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நந்தகுமார் தனது காதலியான கிருஷ்ண பிரியாவின் வீட்டிற்கு வந்து பெண் கேட்டுள்ளார். அப்போது, பிரியாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக முடிவெடுக்க கால அவகாசம் தேவை என கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், நந்தகுமாருக்கும் - பிரியாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிரியா தான் பணி புரியும் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு காலை 10 மணியளவில் வேலைக்கு வந்துள்ளார். அங்கு பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த நந்தகுமார் பிரியாவை இடைமறித்துள்ளார்.

அப்போது, திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் நந்தகுமார் தான் மறைத்துவைத்திருந்த பெட்ரோலை பிரியா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்துள்ளார்.

பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து கடுமையான தீக்காயங்கள் அடைந்த பிரியா - நந்தகுமார் இருவரையும் மீட்டு கோழிக்கோடு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், கடுமையான தீக்காயங்கள் அடைந்த பிரியா சம்பவம் நடைபெற்ற வெள்ளிக்கிழமையே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயங்களுடன் நந்தகுமார் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், நந்தகுமாரும் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story