கொரோனா பின்னணியில் பேரிடர் மேலாண்மை பெரிய சவாலாக ஆகிவிட்டது - ராணுவ தளபதி நரவனே
கொரோனா பாதிப்பு இன்னும் முடிவடையவில்லை. கொரோனா பின்னணியில் பேரிடர் மேலாண்மை பெரிய சவாலாக ஆகிவிட்டது என்று ராணுவ தளபதி நரவனே கூறினார்.
புனே,
‘பிம்ஸ்டெக்’ என்ற அமைப்பில் இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளில் பேரிடர் மேலாண்மை பணிகளில் கூட்டாக ஈடுபடுவது குறித்த பயிலரங்கம் மராட்டிய மாநிலம் புனேவில் நேற்று தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
2019-ம் ஆண்டின் இறுதியில் இருந்து உலகம் முழுவதும் கொரோனாவால் பேரழிவை பார்த்துள்ளோம். சில நாடுகளில் இன்னும் அழிவு நீடித்து வருகிறது. கொரோனாவை கையாள்வதில் உலக நாடுகளிடையே ஒற்றுமை காணப்படுகிறது.
தடுப்பூசி உருவாக்குதல், தடுப்பூசி போடுதல் போன்ற பணிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா ஒவ்வொருவருக்கும் பல பாடங்களை கற்றுத்தந்துள்ளது. கொரோனா பாதிப்பு இன்னும் முடிவடையவில்லை. புதிய உருமாறிய வகைகள் வந்து கொண்டிருக்கின்றன.
கொரோனா வந்த பிறகுதான் நமது பேரிடர் மேலாண்மை வழிமுறைகள் பழமையானவை, தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்தாது என்று தெரிய வந்தது. பேரிடரை எதிர்கொள்வதில் எந்த ஒரு அமைப்பும் தனியாக இயங்க முடியாது என்பதையும் உணர்ந்து கொண்டோம். ஒன்றுக்கொன்று உதவி தேவைப்படுகிறது.
தெற்கு ஆசிய பிராந்தியம், வெள்ளம், சுனாமி, நிலச்சரிவு, நிலநடுக்கம், வறட்சி ஆகிய இயற்கை சீற்றங்கள் அடிக்கடி நடக்கக்கூடியது. திட்டமிடப்படாத நகர்ப்புறமயமாக்கல், சூழலியல் சீர்கேடு, பருவநிலை மாற்றம் ஆகியவை இயற்கை சீற்ற வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. அதிலும் கொரோனா பின்னணியில், பேரிடர் மேலாண்மை என்பது யதார்த்தமானதாகவும், மிகப்பெரிய சவாலாகவும் மாறிவிட்டது. மீட்பு குழுக்கள் முதலில் தங்களை பாதுகாத்துக்கொண்ட பிறகே மற்றவர்களை பாதுகாப்பது பற்றி சிந்திக்க வேண்டியதாகி விட்டது.
கொரோனா ஓயும்வரை இயற்கை சீற்றங்கள் காத்திருக்காது என்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளது. பேரிடர் மேலாண்மை பணிகளில் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story