போலி ஆவணங்கள் மூலம் ரெயில் என்ஜினையே விற்பனை செய்த ஊழியர்...!


போலி ஆவணங்கள்  மூலம் ரெயில் என்ஜினையே விற்பனை செய்த ஊழியர்...!
x
தினத்தந்தி 21 Dec 2021 11:22 AM IST (Updated: 21 Dec 2021 11:22 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே துறையில் பொறியாளராக பணியாற்றி வரும் நபர் ஒருவர் போலி ஆவணங்கள் தயார் செய்து ரெயில் என்ஜினை மோசடியாக விற்பனை செய்து உள்ளார்.

பாட்னா

பீகார் மாநிலம் சமஸ்திபூர் ரெயில்வே கோட்டத்தில் லோகோ டீசல் ஷெட்டில் பொறியாளராக பணியாற்றி வருபவர் ராஜீவ் ரஞ்சன் ஜா, இவர் அந்த கோட்டத்தில் உள்ள புர்னியா கோர்ட் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழமையான ஸ்டீம் ரெயில் என்ஜினை போலி ஆவணங்கள் தயார் செய்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பர் 14ம் தேதி அரங்கேறிய இந்த விற்பனை குறித்த தகவல்கள் இரண்டு நாட்களுக்கு பின்னரே தெரியவந்துள்ளது. மிகவும் திட்டமிடப்பட்டு அரங்கேறியிருக்கும் இந்த மோசடி ரெயில்வே துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ரெயில்வே கோட்டத்தின் பூர்ணியா கோர்ட் ஸ்டேஷன் அருகே பல ஆண்டுகளாக நின்று கொண்டு இருந்த சிறிய நீராவி என்ஜினை  போலி ஆவணங்கள் மூலம் பழைய இரும்பு வியாபார டீலருக்கு விற்பனை செய்து உள்ளார்.

கடந்த டிசம்பர் 14ம் தேதியன்று பூர்ணியா கோர்ட் ஸ்டேஷனில் அவுட் போஸ்ட் பொறுப்பாளர்  எம்.எம்.ரஹ்மான்  பழமையான ஸ்டீம் ரெயில் என்ஜினை பொறியாளர் ராஜீவ் ரஞ்சன் ஜா, கேஸ் கட்டரை பயன்படுத்தி உடைத்துக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார். அவருக்கு சுஷில் என்ற நபர் உதவியாக இருந்துள்ளார். ரெயில் என்ஜினை உடைப்பதை நிறுத்தும்படி அவர் கூறியபோது, சம்பந்தப்பட்ட பொறியாளர் ரெயில் என்ஜினை உடைத்து டீசல் பழைய ஷெட்டுக்கு அனுப்பும் உத்தரவு ஒன்றை அவரிடம் காட்டியிருக்கிறார்.

இது குறித்து  பெண் போலீஸ் சங்கீதா உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

டீசல் ஷெட்டின் பிக் அப் வேன் ரிஜிஸ்டரை மறுநாள்  அதிகாரி சரிபார்த்த போது, எந்த வித ரெயில் பழைய பொருட்களும் டீசல் ஷெட்டை அடையவில்லை என்பதை தெரிந்து கொண்டார். சந்தேகமடைந்த அந்த அதிகாரி, தனது துறைக்கு சென்று இந்த ரெயில்  என்ஜினை உடைக்க ஏதேனும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்த போது அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட பொறியாளர் ராஜீவ் ரஞ்சன் ஜா மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த ரெயில் நிலைய பாதுகாவலர், ஊழியர்கள் என மொத்தம் 7 பேர் மீது ரெயில் என்ஜினை மோசடி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ரெயில்வே போலீசார் 7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்து வருவோரை தேடி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட பொறியாளர் ராஜீவை ரெயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

Next Story