பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
2020-ம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது பேசிய பிரதமர் மோடி, மகள்கள் மற்றும் சகோதரிகளின் உடல்நலம் குறித்து இந்த அரசு தொடர்ந்து அக்கரை கொள்கிறது. ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மகள்களை பாதுகாக்க அவர்கள் சரியான நேரத்தில் திருமணம் செய்துகொள்வது அவசியம். பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.
இதனை தொடர்ந்து ஜெயா ஜெட்லி தலைமையில் நிதி ஆயோக் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த பரிந்துரை செய்து தங்கள் ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சர்ப்பித்தது.
இதற்கிடையில், ஜெயா ஜெட்லி தலைமையிலான குழு சமர்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21- ஆக உயர்த்த கடந்த 16-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா மீது மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்திற்கு பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story