ஒமைக்ரானுக்கு தடுப்பூசிகள் பாதுகாப்பு அளிக்காது என்பதற்கு ஆதாரம் இல்லை - மத்திய சுகாதார மந்திரி
ஒமைக்ரானுக்கு தடுப்பூசிகள் பாதுகாப்பு அளிக்காது என்பதற்கு ஆதாரம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
உலகமெங்கும் பரவி வருகிற ஒமைக்ரான் வைரஸ் தொற்று பற்றி நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.
ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக தற்போது நாட்டில் போடப்பட்டு வருகிற தடுப்பூசிகள், நோய் எதிர்ப்புச்சக்தியை வழங்க பயனுள்ளதாக இருக்கின்றனவா என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா எழுத்து மூலம் பதில் அளித்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது, “ஒமைக்ரான் பற்றி குறிப்பிட்ட அளவிலான தரவுகள்தான் இருக்கின்றன. இது தொடர்பாக தடுப்பூசியின் செயல்திறன் பற்றி மதிப்பாய்வு ஆதாரங்கள் இதுவரை இல்லை.
இருந்தாலும்கூட, தடுப்பூசி பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு பொருள் மற்றும் செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாகவும் உள்ளது. இது ஒப்பீட்டளவில் சிறப்பாக பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தடுப்பூசிகள் இன்னும் தீவிரமான நோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள தடுப்பூசிகள் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்தவையாக நீடிக்கின்றன.
ஒமைக்ரான் வைரஸ் புரதத்தில் உள்ள பிறழ்வுகள் தடுப்பூசியின் செயல்திறனைக்குறைக்கலாம் என்றாலும்கூட, ஒமைக்ரானுக்கு எதிராக தற்போதைய தடுப்பூசிகள் வேலை செய்யாது (பாதுகாப்பு அளிக்காது) என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.
ஆபத்து அடிப்படையில் தற்போதைய பயண வழிகாட்டுதல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. சர்வதேச பயணிகள் வருகை குறித்த வழிகாட்டுதல்களும், விதிமுறைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஆபத்தான நாடுகளில் இருந்து வருகிறவர்கள் வந்து சேர்ந்ததும் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவர்கள் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்வதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
கொரோனா உறுதி செய்யப்படுகிறவர்களுடைய மாதிரிகள், மரபணு வரிசைப்படுத்தும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தியா வந்தபின் 8-வது நாளிலும் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வருகிறவர்களில் 2 சதவீதம் பேர் ரேண்டம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
சர்வதேச பயணிகளை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. பாதிப்புக்கு ஆளாகிறவர்களின் தொடர்பு தடம் அறிதல், 14 நாட்களுக்கு கண்காணித்தல், கொரோனா உறுதி செய்யப்படுகிறவர்களின் மாதிரிகளை ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறிய இன்சாகாக் ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைத்தல் ஆகிய பணிகளை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story