மாநிலங்களவை 45 மணி நேரம் மட்டுமே செயல்பட்டது - வெங்கைய நாயுடு அதிருப்தி
குளிர்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவை 45 மணி நேரம் 34 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாக நிறைவு பெற்றதாக இரு அவை தலைவர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், மாநிலங்களவை செயல்பாடுகள் குறித்து வெங்கைய நாயுடு அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
மாநிலங்களவை திட்டமிட்டதைவிட குறைவாகவே செயல்பட்டது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி இல்லை. மொத்தம் திட்டமிடப்பட்ட 95 மணி நேரம் 6 நிமிட கூட்டத்தில் வெறும் 45 மணி நேரம் 34 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றன. 18 அமர்வுகளில் 47.90 சதவீத பணிகள் நடைபெற்றன.
கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற 12 கூட்டத்தொடரில் 5வது குறைவான பணிகளை மாநிலங்களவை பதிவு செய்துள்ளது. ஒத்திவைப்பு மற்றும் இடையூறுகளால் 49 மணி நேரம் 32 நிமிடங்கள் வீணாகின. மொத்தம் 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதே நேரத்தில் கடைசி நாளான இன்று முடிக்க திட்டமிடப்பட்ட நிதி ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம் எடுத்துக்கொள்ளப்படவில்லை.மொத்தம் 21 மணி நேரம் 7 நிமிடங்கள் மசோதாக்கள் மீது விவாதங்கள் நடைபெற்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story