ஒமைக்ரான் பரவல்; பூஸ்டர் தடுப்பூசி எப்போது...? மத்திய அரசு விளக்கம்


ஒமைக்ரான் பரவல்; பூஸ்டர் தடுப்பூசி எப்போது...? மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 22 Dec 2021 4:49 PM IST (Updated: 22 Dec 2021 4:49 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு பூஸ்டர் தடுப்பூசிகளை எப்போது போடத்தொடங்கும்? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படாத நிலையில், மத்திய அரசு பூஸ்டர் தடுப்பூசிகளை எப்போது போடத்தொடங்கும்? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். தடுப்பூசி தொடர்பாக ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 

அதில், தற்போதுள்ள வேகத்தில் தடுப்பூசி செலுத்தினால், டிசம்பர் மாத இறுதிக்குள் 42 சதவீத மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 6.1 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில், சராசரியாக ஒரு நாளைக்கு 58 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகிறது என்றும் அந்த பதிவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது குறித்து மத்திய அரசின் கொரோனா பணிக்குழுவின் தலைவர் டாக்டர் விகே பால் கூறுகையில், பூஸ்டர் தடுப்பூசி குறித்த முடிவு அறிவியல்பூர்வ முடிவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். தடுப்பூசியின் தேவை, செலுத்தப்படும் காலம், பூஸ்டரின் தன்மை ஆகியவை அறிவியல் பூர்வமான முடிவுகளின் அடிப்படையில் அமையும் என சுகாதாரத்துறை மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்பதாகவும் டாக்டர் வி.கே.பால் குறிப்பிட்டார்.

கொரோனா தாக்கம் ஆரம்ப கட்டங்களில் லேசான அறிகுறிகளுடன் வருவதால், அதன் வடிவத்தில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என நிபுணர்கள் கவனித்து வருவதாகவும் அவர் கூறினார். இரண்டு டோஸ் தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி 3-6 மாதங்களுக்குப் பிறகு குறைவதால் ஒரு பூஸ்டர் அவசியம் என்று டெல்லி ஐ.எல்.பி.எஸ். மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சரின் தெரிவித்துள்ளார். 

மேலும், மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் செலுத்தப்பட்டால், கடுமையான தொற்று மற்றும் மருத்துவமனையில் சேர்க்கவேண்டிய ஆபத்து குறையும் என்றும் அவர்  குறிப்பிட்டார். குறிப்பாக, ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால் முன்களப் பணியாளர்கள் முதலில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் சரின் வலியுறுத்தி உள்ளார்.

Next Story