செல்போனை திருடியதாக 8 வயது சிறுமியை துன்புறுத்திய பெண் போலீஸ்; ரூ 1.5 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு


செல்போனை திருடியதாக 8 வயது சிறுமியை துன்புறுத்திய பெண் போலீஸ்; ரூ 1.5 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 22 Dec 2021 6:55 PM IST (Updated: 22 Dec 2021 6:55 PM IST)
t-max-icont-min-icon

தனது செல்போனை திருடியதாக 8 வயது சிறுமி மற்றும அவரது தந்தையை பெண் போலீஸ் துன்புறுத்திய விவகாரத்தில் சிறுமிக்கு 1.5 லட்ச ரூபாய் வழங்க கோர்ட் உத்தரவிட்டது.

திருவனந்தபுரம்,

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் ஆடின்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவர் தனது 8 வயது மகளுடன் கடந்த 27-ம் தேதி ஆடின்க்ல் பகுதியில் உள்ள மூனுமுக்கு சாலைக்கு வந்துள்ளார். 

அங்கு விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கனரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட உதிரி பாகங்களை பார்த்துக்கொண்டிருந்தனர்.  அங்கு மாநில அரசின் பிங் போலீஸ் பிரிவின் ரஞ்சிதா மற்றும் சக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பெண் போலீஸ் ரஞ்சிதாவின் செல்போன் மாயமாகியுள்ளது.

இதனால், போலீஸ் வாகனம் மீது நின்றுகொண்டிருந்த ஜெயசந்திரன் மற்றும் அவரது 8 வயது பெண் குழந்தை ஆகிய இருவருமே தனது செல்போனை திருடியுள்ளனர் என பெண் போலீஸ் ரஞ்சிதா கருதியுள்ளார். இதனையடுத்து, தந்தை ஜெயசந்திரன் மற்றும் மகளான 8 வயது சிறுமியிடமும் பெண் போலீஸ் விசாரித்தார். 

செல்போனை தாங்கள் எடுக்கவில்லை என ஜெயசந்திரன் கூறியுள்ளார். தனது தந்தை திருடவில்லை என 8 வயது சிறுமி கூறியபோதும் நீங்கள் தான் திருடியுள்ளீர்கள் என பெண் போலீஸ் ரஞ்சிதா தொடர்ந்து கூறியுள்ளார். 

தான் திருடவில்லை என தொடர்ந்து கூறியதால் ஆத்திரமடைந்த ரஞ்சிதா சக போலீசாருடன் இணைந்து ஜெயசந்திரனையும், அவரது மகளையும் துன்புறுத்தியுள்ளனர். 

தனது தந்தையும் தானும் போலீசாரால் துன்புறுத்தப்படுவதால் அதிர்ச்சியடைந்த 8 வயது சிறுமி அழுதுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் கூடினர். 

பொதுமக்களில் ஒருவர் பெண் போலீஸ் ரஞ்சிதாவிடம் அவரின் போன் நம்பரை பெற்று அந்த நம்பருக்கு போன் செய்துள்ளார். அப்போது, ரஞ்சிதாவின் செல்போன் போலீஸ் வாகனத்திலேயே இருந்துள்ளது.

தனது செல்போனை போலீஸ் வாகனத்திலேயே வைத்திருந்த ரஞ்சிதா செல்போனை சாலையில் நின்றுகொண்டிருந்த ஜெயசந்திரனும் அவரது 8 வயது மகளும் திருடி விட்டதாக தவறுதலாக நினைத்து அவர்கள் இருவரையும் துன்புறுத்தியுள்ளனர். 

செல்போனை வாகனத்திலேயே இருந்தது தெரியவந்ததையடுத்து பெண் போலீஸ் ரஞ்சிதா சக போலீசாருடன் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு சென்றுவிட்டார். அவர் ஜெயசந்திரனிடமோ அவரது மகளிடமோ எந்த வித மன்னிப்பும் கேட்கவில்லை. 

இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலானது. இதனை தொடர்ந்து பெண் போலீஸ் ரஞ்சிதா மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, தன் மீதும் தனது தந்தை மீது போலியாக திருட்டு குற்றம் சுமத்தி தாக்குதல் நடத்திய பெண் போலீஸ் ரஞ்சிதா மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், இந்த சம்பத்தில் தனக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஜெயசந்திரனின் 8 வயது மகள் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஜெயசந்திரனின் 8 வயது மகள் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த கேரள ஐகோர்ட்டு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1.5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது. பெண் போலீஸ் அந்த சிறுமியின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் செயல்பட்டுள்ளார். 
அந்த செயலுக்காக பெண் போலீஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டார். 

மேலும், இந்த வழக்கில் சிறுமிக்கு 1.5 லட்ச ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவுக்காக 25,000 ரூபாயும் வழங்க மாநில அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.  

Next Story