உலக நாடுகளில் கொரோனா 4-வது அலை: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: மத்திய அரசு


உலக நாடுகளில் கொரோனா 4-வது அலை: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: மத்திய அரசு
x
தினத்தந்தி 24 Dec 2021 8:25 PM IST (Updated: 24 Dec 2021 8:25 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 61 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உலக நாடுகளில் கொரோனா 4-வது அலை பரவி வருவதாகவும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதில் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

 உலகம் 4-வது கொரோனா அலையை எதிர்கொண்டுள்ளது. ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில் வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளில் கொரோனா குறைவாக இருக்கிறது. இருந்தாலும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தியாவில் இதுவரை 358- பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்  121 பேர் வெளிநாட்டு பயணம் செய்தவர்கள்.  

ஒமைக்ரான் பாதித்தவர்களில் 183 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள். 7 பேர் தடுப்பூசி போடாதோர், 2 பேர் ஒரு டோஸ் மட்டும் செலுத்தியவர்கள். ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்கும் ஆகும் காலம் 1.5 முதல்  3 நாட்களாக மட்டுமே உள்ளது.

இந்தியாவில் தற்போது வரை  டெல்டா வகை கொரோனா ஆதிக்கமே உள்ளது.  மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும். இந்தியாவில்  61 சதவீதம் பேர்  முழுமையாக தடுப்பூசி  செலுத்திக்கொண்டுள்ளனர். 89 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்” என்றார். 


Next Story