பஞ்சாப் கோர்ட் குண்டுவெடிப்பில் உயிரிழந்தது யார்? - வெளியான பகீர் தகவல்


பஞ்சாப் கோர்ட் குண்டுவெடிப்பில் உயிரிழந்தது யார்? - வெளியான பகீர் தகவல்
x
தினத்தந்தி 25 Dec 2021 10:17 AM IST (Updated: 25 Dec 2021 10:17 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட் வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை குண்டு வெடித்தது. கோர்ட் வளாகத்தில் உள்ள இரண்டாவது தளத்தின் கழிவறையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு,  தேசிய பாதுகாப்பு படை உள்பட பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தின. குண்டுவெடிப்பை நிகழ்த்தியது யார்? இந்த சம்பவத்தில் உயிரிழந்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபர் யார் என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபர் பஞ்சாப் போலீஸ் துறையில் பணியாற்றிய கனங்தீப் சிங் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. லூதியானாவின் ஹனா பகுதியை சேர்ந்த கனங்தீப் சிங் மாநில போலீஸ் துறையில் தலைமை காவலராக பணியாற்றியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கிலும், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் கனங்தீப் சிங்கிற்கு தொடர்பு இருந்ததையடுத்து அவர் 2019 ஆம் ஆண்டு தலைமை காவலர் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதியில் கிடந்த செல்போன் சிம்கார்டு உதவியுடன் உயிரிழந்தது கனங்தீப் சிங் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். பணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை கனங்தீப் சிங் நடத்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், கோர்ட் கழிவறையில் வைத்து வெடிகுண்டை பொருத்தும்போது எதிர்பாராத விதமாக திடீரென அங்கேயே வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.          

Next Story