மீண்டும் ஆன்லைன் வகுப்பு - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பரிந்துரை


மீண்டும் ஆன்லைன் வகுப்பு - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பரிந்துரை
x

ஆன்லைன் வகுப்புகள் குறித்து முடிவு எடுக்குமாறு தொழிநுட்பக் கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், தற்போது ஒமைக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் பரவ தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

இந்த சூழலில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், நாட்டில் தற்போது நிலவி வரும் ஒமைக்ரான் சூழலை கருத்தில் கொண்டு, மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவது போன்ற திட்டங்கள் குறித்து தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்ததையடுத்து கடந்த ஓரிரு மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்துவது குறித்து முடிவு எடுக்குமாறு தொழில்ட்நுட்ப கவுன்சில் பரிந்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story