கர்நாடகத்தில் தற்போதைக்கு முதல்-மந்திரி மாற்றம் இல்லை: மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி
கர்நாடகத்தில் தற்போதைக்கு முதல்-மந்திரி மாற்றம் இல்லை என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.
வாஜ்பாய் பிறந்தநா விழா
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று பா.ஜனதாவினர் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பழைய உப்பள்ளி பகுதியில் பா.ஜனதாவினர் தூய்மை பணி மற்றும் மரக்கன்று நடும் பணிகளை மேற்கொண்டனர். இப்பணிகளை மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி இங்கு தூய்மை பணி மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.
அம்பேத்கர் வகுத்த சட்டவிதிகள்
மாநில கட்சிகள், மாநிலத்தில் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். பா.ஜனதா கட்சி தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளர்ச்சி பணிகளை மெச்சத்தகுந்த வகையில் செய்து வருகிறது. பிரதமர் மோடியின் கனவை, பா.ஜனதாவினர் நிறைவேற்றி வருகிறார்கள். பிரதமரின் முக்கிய கனவு, நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதம் வருத்தம் அளிக்கிறது. அவர்கள் சபாநாயகரின் உத்தரவுகளுக்கு செவி சாய்க்கவில்லை. பிரதமர் எதைச் செய்தாலும் அதை காங்கிரசார் எதிர்க்கிறார்கள். அம்பேத்கர் வகுத்த சட்டவிதிகளை காங்கிரசார் மதிக்காமல் அவரை அவமதிக்கிறார்கள்.
முதல்-மந்திரி மாற்றம் இல்லை
கர்நாடகத்தில் தற்போதைக்கு முதல்-மந்திரி மாற்றம் இல்லை. உண்மைக்கு புறம்பான தகவல்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதும் தவறு. முதல்-மந்திரி மாற்றப்படுவார் என்று செய்தி பரவுவதும், பரப்புவதும் தவறு.
முதல்-மந்திரி பதவியில் இருந்து பசவராஜ் பொம்மையை மாற்றுவதற்காக மேலிட தலைவர்கள் அளவிலும் ஆலோசனை நடக்கவில்லை. மேலிடம் அளவில் ஏதேனும் ஆலோசனை நடந்தால்தான் எனக்கு தெரியவரும்.
இவ்வாறு பிரகலாத் ஜோஷி கூறினார்.
Related Tags :
Next Story