ஒமைக்ரான் பரவலால் மும்பையில் புத்தாண்டு கொண்டாட தடை


ஒமைக்ரான் பரவலால் மும்பையில் புத்தாண்டு கொண்டாட தடை
x
தினத்தந்தி 26 Dec 2021 2:49 AM IST (Updated: 26 Dec 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து அமலில் இருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது.


மும்பை, 

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து அமலில் இருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. அதுமட்டும் இன்றி பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் என அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கொரோனா உருமாறி ஒமைக்ரான் வடிவில் புதிய அவதாரம் எடுத்து பரவி வருகிறது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களால் இந்த நோய் தொற்றின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இதனால் நேற்று முன்தினம் முதல் மராட்டியத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மக்கள் பொதுவெளியில் 5 பேருக்கு கூட தடை விதிக்கப்பட்டது.

மேலும் துபாயில் இருந்து வரும் மும்பை வாசிகள் தங்களை 7 நாட்கள் வீட்டு தனிமைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு டிசம்பர் 25-ந் தேதி(நேற்று) இரவு முதல் அமலுக்கு வந்தது. அடுத்த உத்தரவு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும்.

இந்த உத்தரவு அனைத்து ஓட்டல்கள், பார்கள், உணவகங்கள் மற்றும் கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடிய தனியாருக்கு சொந்தமான இடங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story