ஒமைக்ரான் பரவல்: தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய நிபுணர் குழு வருகிறது


ஒமைக்ரான் பரவல்: தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய நிபுணர் குழு வருகிறது
x
தினத்தந்தி 26 Dec 2021 6:25 AM IST (Updated: 26 Dec 2021 6:25 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய நிபுணர் குழு வருகிறது. இந்த குழு நோய் பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்குகிறார்கள்.

புதுடெல்லி, 

தென்ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவில் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, கடந்த 2-ந் தேதி கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதிப்பு முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அது பரவியுள்ளது.

தற்போது நாட்டில் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 415-ஐ தொட்டுள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 110 பேரும், அதைத்தொடர்ந்து டெல்லியில் 79 பேரும், குஜராத்தில் 43 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்கானாவில் 38 பேரும், கேரளாவில் 37 பேரும், தமிழ்நாட்டில் 34 பேரும், கர்நாடகாவில் 31 பேரும், ராஜஸ்தானில் 22 பேரும், ஒடிசா, அரியானா, ஆந்திராவில் தலா 4 பேரும், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளத்தில் தலா 3 பேரும், உத்தரபிரதேசத்தில் 2 பேரும், சண்டிகார், லடாக், உத்தரகாண்டில் தலா ஒருவரும் இத்தொற்றுக்கு உள்ளாகினர். இவர்களில் 115 பேர் குணமடைந்ததால் ஆஸ்பத்திரிகளில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு பன்னோக்கு குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அவர் கூறினார்.

அதன்படி, தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களுக்கு பன்னோக்கு மத்திய குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. கேரளா, மராட்டியம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சில மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பது மத்திய சுகாதார அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்தது. இந்த மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் வேகம், தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. ஆகவே, கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு உதவும்வகையில் இந்த மாநிலங்களுக்கு பன்னோக்கு மத்திய குழுக்களை அனுப்பி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் 3 முதல் 5 நாட்கள் தங்கி இருக்கும். மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும். தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், கண்காணிப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கொரோனா பரிசோதனை, பாதிப்பு நிறைந்த பகுதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்புதல் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.

கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது, ஆஸ்பத்திரி படுக்கைகள், ஆம்புலன்சுகள், வென்டிலேட்டர்கள், மருத்துவ ஆக்சிஜன் ஆகியவை போதிய அளவுக்கு இருக்கிறதா என்பதை இக்குழுக்கள் ஆய்வு செய்யும். ஒமைக்ரான் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்யும்.

ஒவ்வொரு நாளும் நிலைமையை ஆராய்ந்து இரவு 7 மணியளவில் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கும். அதே அறிக்கையை மாநில அரசுகளிடமும் சமர்ப்பிக்கும். நோய் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஆலோசனையும் வழங்குவார்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story