புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: நாராயணசாமி
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் இதுவரை ஒமைக்ரான் தொற்று இல்லை. இதனால் நாம் மெத்தனமாக இருந்து விடக்கூடாது. அண்டை மாநிலமான தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி அளித்தது. இதனால் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் அதிகளவில் குவிந்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாடுவதன் மூலம் ஒமைக்ரான் வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் புதுச்சேரி மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். எனவே புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள முடிவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மறுபரிசீலனை செய்யவேண்டும்.
பிரதமர் மோடி நல்லாட்சி தினம் கொண்டாடுகிறார். இந்திய நாட்டில் அந்தநிலை இருக்கிறதா என்றால் இல்லை. புதுச்சேரி மாநிலத்தில் கூட நல்லாட்சி என்று கூறுகிறார்கள். நல்லாட்சி எங்கே நடக்கிறது. நல்லாட்சி தினம் கொண்டாட பா.ஜ.க.வுக்கு தகுதி இல்லை.
புதுச்சேரியில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. கொலை, கொள்ளை, நில அபகரிப்பு, மாமூல் வேட்டை நடக்கிறது. இதனை முதல்-அமைச்சர் வேடிக்கை பார்த்து வருகிறார். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story