சிறப்பான சுகாதார செயல்பாட்டில் ,கேரளா முதல் இடம், 2-வது இடத்தில் தமிழ்நாடு உத்தரபிரதேசத்துக்கு கடைசி இடம்


சிறப்பான சுகாதார செயல்பாட்டில் ,கேரளா முதல் இடம், 2-வது இடத்தில் தமிழ்நாடு உத்தரபிரதேசத்துக்கு கடைசி இடம்
x
தினத்தந்தி 28 Dec 2021 5:54 AM IST (Updated: 28 Dec 2021 5:54 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பான சுகாதார செயல்பாட்டில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருப்பதாக ‘நிதி ஆயோக்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

சிறப்பான சுகாதார செயல்பாட்டில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருப்பதாக ‘நிதி ஆயோக்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கேரளா முதல் இடத்திலும், உத்தரபிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.

2019-2020 ஆண்டில் ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களை தரவரிசைப்படுத்தி, மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பு பட்டியல் தயாரித்துள்ளது. சுகாதார செயல்பாட்டின் முக்கிய அம்சங்கள் அடங்கிய 24 அளவுகோல்கள் அடிப்படையில் 4-வது ஆண்டாக இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்தும், உலக வங்கியின் தொழில்நுட்ப உதவியுடனும் பட்டியல் தயாராகி உள்ளது.

இந்த பட்டியலில், பெரிய மாநிலங்களிடையே ஒட்டுமொத்த சிறப்பான செயல்பாட்டில், தொடர்ந்து 4-வது ஆண்டாக கேரளா முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது.

ஆனால், 2018-2019 ஆண்டில் இருந்து சுகாதார செயல்பாட்டை அதிகரித்தவகையில் பெரிய மாநிலங்களிடையே கேரளா 12-வது இடத்துக்கும், தமிழ்நாடு 8-வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. பீகார், மத்தியபிரதேசம் ஆகியவை கடைசிக்கு முந்தைய 2 இடங்களில் உள்ளன. ராஜஸ்தானும் மோசமான இடத்தில் உள்ளது. இருப்பினும், முந்தைய ஆண்டில் இருந்து செயல்பாட்டை அதிகரித்தவகையில், உத்தரபிரதேசம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

சிறிய மாநிலங்கள் அடங்கிய பட்டியலில், ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் மிசோரம், திரிபுரா ஆகியவை முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.

யூனியன் பிரதேசங்களிடையே டெல்லி, காஷ்மீர் ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன. ஆனால், முந்தைய ஆண்டில் இருந்து செயல்பாட்டை அதிகரித்தவகையில் முதல் இடங்களை பிடித்துள்ளன.

Next Story