கர்நாடகாவில் அமலுக்கு வந்தது இரவுநேர ஊரடங்கு


கர்நாடகாவில் அமலுக்கு வந்தது இரவுநேர ஊரடங்கு
x
தினத்தந்தி 29 Dec 2021 1:18 AM IST (Updated: 29 Dec 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.



பெங்களூரு,

கர்நாடகாவில் இதுவரை 38 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.  இதற்கிடையே ஒமைக்ரான் பரவலை தடுக்க அனைத்து மாநிலங்களும் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி உத்தரபிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கர்நாடகாவில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசின் உத்தரவுப்படி, நேற்றிரவு (செவ்வாய் கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

அதன்படி இரவு நேர ஊரடங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) அமலுக்கு வந்தது. இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த ஊரடங்கு காரணமாக கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும். அவர்கள் 10 மணிக்குள் தங்களின் வீடுகளை சென்றடைய வேண்டும்.

இதனால் இரவு 9.30 மணிக்கு கடைகளை மூடினால் தான் அவர்கள் 10 மணிக்குள் வீட்டுக்கு செல்ல முடியும். இதன்காரணமாக அனைத்து வியாபார நிறுவனங்களும் இரவு 9.30 மணி முதலே மூட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இரவு 10 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட அனுமதி இல்லை. இரவு நேரங்களில் இயங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் அடையாள அட்டையை காட்டிவிட்டு பயணிக்கலாம். தனியார் வாகனங்கள் போக்குவரத்திற்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பஸ், மெட்ரோ ரெயில் மற்றும் ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும். மின் வணிகத்திற்கு தடை இல்லை. பொருட்களை வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்யவும், அதை கொண்டு செல்லும் "டெலிவரி பாய்கள்" பயணிக்க எந்த தடையும் இல்லை. இந்த ஊரடங்கு 10 நாட்கள் அதாவது ஜனவரி 6ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு கூறியுள்ளது.

இதன்படி, கர்நாடகாவின் கலபுரகி நகரில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.  இதனால் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  ஹூப்ளி நகரிலும் கடைகளை மக்கள் அடைத்து விட்டு புறப்பட்டு சென்றனர்.  சிவமொக்கா நகரிலும் இரவுநேர ஊரடங்கு ஊத்தரவு கடுமையாக பின்பற்றப்படுகிறது.  வாகனங்கள் முறையான சோதனைக்கு பின்னரே செல்ல அனுமதிக்கப்படுகிறது.


Next Story