மும்பையில் இன்று கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டக்கூடும்; ஆதித்ய தாக்கரே


மும்பையில் இன்று கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டக்கூடும்; ஆதித்ய தாக்கரே
x
தினத்தந்தி 29 Dec 2021 12:09 PM GMT (Updated: 29 Dec 2021 12:09 PM GMT)

மும்பையில் படிப்படியாக தொற்று பாதிப்பு அதிகரித்து தற்போது 1,000-ஐ தாண்டியிருப்பது மக்களுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் 2-வது அலை ஏற்பட்டு மக்களை ஆட்டிப்படைத்தது. அதன்பிறகு மாநிலத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. நவம்பர் மாதம் முதல் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-க்கும் குறைவாகவே இருந்தது. 

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. நேற்று மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதன்படி புதிதாக 2 ஆயிரத்து 172 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 22 பேர் பலியானார்கள்.

இதேபோல மாநில தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு திடீரென எகிறி உள்ளது. இங்கு நேற்று ஒரேநாளில் 1,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மும்பையில் 7 மாதங்களுக்கு பிறகு பதிவான அதிகபட்ச பாதிப்பு இதுவாகும். நகரில் கடந்த 15-ந் தேதி 238 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன்பிறகு படிப்படியாக தொற்று பாதிப்பு அதிகரித்து தற்போது 1,000-ஐ தாண்டி கிலியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மும்பையில் இன்றைய பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டக்கூடும் என்று  மராட்டிய மந்திரி ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.  ஆதித்ய தாக்கரேவிடம் 3-வது அலைக்கான தொடக்கமா ? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், மருத்துவர்களும், நிபுணர்களும் இதை முடிவு செய்ய வேண்டும்” என்றார்.  

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்தும் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆதித்ய தாக்கரே ஆலோசனை நடத்தினார். 


Next Story