11½ கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் - புத்தாண்டு தினத்தில் பிரதமர் மோடி வழங்குகிறார்
பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின்கீழ் புத்தாண்டு தினத்தில் 11½ கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரத்தை அவர்களின் வங்கிக்கணக்குகளில் பிரதமர் மோடி செலுத்துகிறார்.
புதுடெல்லி,
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. இந்தப்பணம் அவர்களது வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஏறத்தாழ 11 கோடியே 60 லட்சம் விவசாயிகள் பலன் அடைகிறார்கள்.
இந்த திட்டத்தின்கீழ் அடுத்த தவணையை புத்தாண்டு தினத்தன்று (சனிக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு பிரதமர் மோடி வழங்குகிறார். இந்த தொகையை அவர் 11 கோடியே 60 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்துகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 ஆயிரம் விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 2027-28 வரையில் 10 ஆயிரம் புதிய விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கி மத்திய அரசு மேம்படுத்துகிறது. இதற்கு பட்ஜெட்டில் ரூ.6,865 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கும் புத்தாண்டு தினத்தன்று பிரதமர் மோடி மானியத்தை விடுவிக்கிறார். இதற்கான அறிவிப்பு, மத்திய விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story