மாநில நிதி மந்திரிகளுடன், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சந்திப்பு


மாநில நிதி மந்திரிகளுடன், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சந்திப்பு
x
தினத்தந்தி 30 Dec 2021 5:16 AM IST (Updated: 30 Dec 2021 5:16 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதி மந்திரிகளுடன் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சந்திப்பு நடத்துகிறார்.

புதுடெல்லி,

2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், வருகிற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதி மந்திரிகளுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடத்துகிறார்.

இந்தக் கூட்டத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்த சவாலை எதிர்கொள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கூடுதல் நிதி கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, தேர்தலை சந்திக்கவிருக்கும் மாநிலங்களின் கோரிக்கைகளும், ஆலோசனைகளும் இந்தக் கூட்டத்தில் முக்கியமாக கவனிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையில், பட்ஜெட் தொடர்புடைய 7 குழுக்களின் 120 அழைப்பாளர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தை நிர்மலா சீதாராமன் நேற்று நடத்தினார். அப்போது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, டிஜிட்டல் சேவைகளுக்கு உள்கட்டமைப்பு தகுதி, வருமானவரி வரையறைகளை சீர்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள், கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

பங்கேற்பாளர்களின் ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்த நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தயாரிப்பின்போது அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story