மத்திய பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து
மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்று இருக்கிறது. அது குறித்த ஒரு பார்வை...
பா.ஜனதா:-
வளர்ச்சி சார்ந்த, தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட். தற்சார்பு இந்தியா திட்டத்தில் மோடி அரசின் கவனம் கோடிட்டு காட்டப்பட்டு உள்ளது. புதிய இந்தியாவின் ஆற்றல்களை பயன்படுத்துவதில் பட்ஜெட் கவனம் செலுத்துகிறது.
உள்துறை மந்திரி அமித்ஷா:-
இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றும் பட்ஜெட்டாக இருக்கிறது. இந்த பட்ஜெட் இந்தியாவை தன்னிறைவு கொண்டதாக மாற்றும். சுதந்திரத்தின் 100-வது ஆண்டில் புதிய இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைக்கும். இதற்காக பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை வாழ்த்துகிறேன்.
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார்:-
ஒரு சமநிலை கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்காக மத்திய அரசை பாராட்டுகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக தொற்றுநோய் பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பாதகமான சூழ்நிலைகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில், நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக பட்ஜெட்டில் பல திட்டங்கள அறிவிக்கப்பட்டு உள்ளன.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்:-
மத்திய பட்ஜெட் பணவீக்கத்தை அதிகரிக்கும். ஏழை-பணக்காரர் இடையேயான இடைவெளியை அதிகரிக்கும். நிதி விவகாரத்தில் மாநிலங்களை பிழிந்து, பெரும் கார்பரேட் நிறுவனங்களின் நலன்களை திருப்திப்படுத்துகிறது. மொத்தத்தில் நாடு மற்றும் அதன் மக்களின் நலன்களைப் பாதிக்கிறது.
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ்:-
நோக்கமில்லாத, பயனற்ற பட்ஜெட் இது. எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சம்பளதாரர்கள் என பல்வேறு பிரிவினருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. விவசாயத் துறைக்கு நிதியுதவி வழங்குவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், விவசாயத் துறைக்கு பட்ஜெட் "பெரிய பூஜ்ஜியம்".
சிவசேனா:-
சாதாரண மக்களுக்கு எதுவும் இல்லை. அவர்களின் சுமைகளை குறைக்கவோ, வருவாயை அதிகரிக்கவோ எதுவும் இல்லை. வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றி பேசாத பட்ஜெட் எப்படி எதிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்? மத்திய அரசு வாய்ப்பை தவற விட்டுவிட்டது.
சத்தீஸ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல்:-
இளைஞர்கள், வேலையில்லா பட்டதாரிகள், பெண்கள், விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை. மொத்தத்தில் திசையில்லா பட்ஜெட்.
திரிபுரா முதல்-மந்திரி பிப்லாப் தேவ்:-
அனைத்து இந்தியர்களின் விருப்பங்களையும் நிறைவேற்றும் பிரதமர் மோடியின் வாக்குறுதிகள் மற்றும் புதிய இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களை மேம்படுத்த திட்டம் அறிவித்ததற்காக பிரதமருக்கும், நிதி மந்திரிக்கும் நன்றி.
குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல்:-
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை முற்றிலும் இலவசமாக கொடுத்து, சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்திய போதும், பட்ஜெட்டில் எந்த வித வரி உயர்வும் இல்லை. மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட்.
சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):-
யாருக்காக இந்த பட்ஜெட்? 10 சதவீத பணக்கார இந்தியர்கள் நாட்டின் 75 சதவீத செல்வத்தை வைத்துள்ளனர். கீழே உள்ள 60 சதவீதம் பேர் 5 சதவீதத்துக்கும் குறைவாக வைத்திருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை மற்றும் பட்டினி பெருகிவிட்ட நிலையில், தொற்றுநோயின் போது அதிக லாபம் ஈட்டியவர்களுக்கு ஏன் அதிக வரி விதிக்கப்படவில்லை?
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி:-
வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வால் சிதைக்கப்பட்டு வரும் சாதாரண மக்களுக்கு எதுவும் இல்லை. ஒரு பெகாசஸ் சுழல் பட்ஜெட்.
மாயாவதி (பகுஜன் சமாஜ்):-
பழைய வாக்குறுதிகள், அறிவிப்புகள் மறந்துவிட்ட நிலையில், புதிய வாக்குறுதிகளுடன் மக்களை கவரும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதிகரித்து வரும் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள் தற்கொலை போன்ற தீவிர பிரச்சினைகளை ஏன் மத்திய அரசு புறக்கணிக்கிறது?
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால்:-
கொரோனா காலகட்டத்தில் மத்திய பட்ஜெட் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் மக்களை மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. சாதாரண மக்களுக்கோ, விலைவாசி குறைப்புக்கோ எதுவும் இல்லை.
Related Tags :
Next Story