சிறார்களுக்கு குறித்த நேரத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி - மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
சிறார்கள் 2-வது டோஸ் தடுப்பூசியை குறித்த நேரத்தில் செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இதுவரை 15 வயது முதல் 18 வயது வரையிலான 4 கோடியே 66 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவேக்சின் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 28 நாட்களுக்குப் பிறகு, அதன் 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் ஜனவரி 3 ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட 42 லட்சம் சிறார்கள ஜனவரி 31 ஆம் தேதி 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். இதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் நிலுவையில் உள்ள பயனாளிகள் அனைவரும் குறித்த நேரத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story