தனியார் கிரிப்டோ முதலீடு: மத்திய அரசு பொறுப்பல்ல
தனியார் கிரிப்டோவில் முதலீடு செய்பவர்கள், அதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் மத்திய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உலகமெங்கும் கிரிப்டோகரன்சி என்று அழைக்கப்படுகிற மெய்நிகர் நாணயம் பிரபலமாகி வருகிறது. இந்த நாணயத்தை கண்களால் பார்க்கவோ, கைகளால் பரிமாற்றம் செய்யவோ முடியாது. இது டிஜிட்டல் வடிவத்தில் தான் இருக்கும். குறிப்பாக இணையவெளியில் கிடைக்கும். உலகளவில் இதற்கான சட்ட விதிகள் வகுக்கப்படாமல் வர்த்தகம் செய்யப்படுகிறது.
உலகம் அறிந்த கிரிப்டோகரன்சியாக பிட்காயின் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எத்தேரியம், டெதர், கார்டனோ, இ.டி.எச்., மேட்டிக், எல்டிசி, டாட், சோல் என இந்த கிரிப்டோகரன்சியின் பட்டியல் நீளுகிறது. இவற்றின்மீது முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு பெருத்த லாபத்தை தருகிறது.
இந்தியாவில் இந்த கிரிப்டோகரன்சிக்கு போட்டியாக டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் கரன்சியை பாரத ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யும்.
இதுபற்றிய அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் வெளியிட்ட நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “டிஜிட்டல் கரன்சி மிகவும் திறமையான மற்றும் மலிவான நாணய மேலாண்மை அமைப்புக்கு வழிவகுக்கும். எனவே 2022-23 முதல் பாரத ரிசர்வ் வங்கியால் பிளாக்செயின் தொழில் நுட்பத்தை பின்பற்றி டிஜிட்டல் கரன்சி வெளியிட முன்மொழியப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்கிறவர்களுக்கு மத்திய பட்ஜெட்டில் பலத்த அடி விழுந்துள்ளது. அது, அவர்களது டிஜிட்டல் முதலீட்டில் கிடைக்கும் அனைத்து வருமானங்களுக்கும் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பது தான்.
இந்தநிலையில், தனியார் கிரிப்டோவில் முதலீடு செய்பவர்கள், அதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அதேபோல் உங்கள் முதலீடு வெற்றிபெறுமா இல்லையா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால் நஷ்டம் ஏற்படலாம் இதற்கு அரசு பொறுப்பல்ல என மத்திய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story