‘ரபேல்-எம்’ போர் விமான சோதனை வெற்றி...!


‘ரபேல்-எம்’ போர் விமான சோதனை வெற்றி...!
x
தினத்தந்தி 3 Feb 2022 4:39 AM IST (Updated: 3 Feb 2022 4:39 AM IST)
t-max-icont-min-icon

ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலில் பயன்படுத்துவதற்காக ‘ரபேல்-எம்’ போர் விமான சோதனை வெற்றிகரமாக நடந்தது.

கொல்கத்தா,

உலகின் வலிமை வாய்ந்த கடற்படைகளில் ஒன்று இந்திய கடற்படை. இந்த படைக்காக முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது, ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகும். இந்த போர்க்கப்பலின் எடை 44 ஆயிரம் டன் ஆகும்.

இந்த போர்க்கப்பலில் பிரான்சின் ‘ரபேல்-எம்’ போர் விமானத்தை பயன்படுத்துவதற்கான சோதனை, கோவாவில் உள்ள கரையோரப்பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த ‘ரபேல்-எம்’ போர் விமானம், அமெரிக்காவின் சூப்பர் ஹார்னெட்டுடன் போட்டியிடத்தக்கதாகும்.

இவ்விருவகை விமானங்களையும் வாங்குவதற்கு மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. ஐ.என்.எஸ். விக்ராந்த், வரும் ஆகஸ்டு மாதம் இந்திய கடற்படையில் இணையப்போகிறது. அதற்காக தற்போது அரபிக்கடலிலும், வங்ககடலிலும் சோதனை ஓட்டத்துக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் ‘ரபேல்-எம்’ விமானத்தை ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் பயன்படுத்துவதற்காக கோவாவில் சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது.

இதுபற்றி இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதர் இம்மானுவேல் லெனைன் கூறியதாவது:-

இந்தியாவின் விமானம் தாங்கி போர்க்கப்பலில் இருந்து ‘ரபேல்-எம்’ விமானத்தின் புறப்பாடு திறனை சரிபார்க்க சோதனைகள் செய்யப்பட்டன. அது மிகச்சிறப்பாக செயல்பட்டது.

‘ரபேல்-எம்’ போர் விமானம் 12 நாட்கள் கோவாவில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்சா தளத்தில் 283 மீட்டர் ‘மாக் ஸ்கை-ஜம்ப்’ வசதியை பயன்படுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்திய விமானப்படை ரபேல் போர் விமானங்களை ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது. அதில் மிகவும் திருப்தியும் அடைந்துள்ளது.

நாங்கள் ஏற்கனவே 35 ரபேல் போர் விமானங்களை வினியோகம் செய்து விட்டோம். 36-வது விமானத்தை வரும் ஏப்ரலுக்குள் வழங்கி விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கடற்படைக்காக அமெரிக்காவின் சூப்பர் ஹார்னட் அல்லது எப்/ஏ-8 ஜெட் விமானம், அடுத்தமாதம் கோவா ஐ.என்.எஸ். ஹன்சா தளத்தில் பரிசோதித்து பார்க்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவுக்கு ஏற்ற விதத்தில் ‘ரபேல்-எம்’ மற்றும் சூப்பர் ஹார்னட் விமானம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய கடற்படையானது, அணு ஆயுதங்களையும், வானில் இருந்து வானுக்கும், வானில் இருந்து தரைக்கும் ஏவும் ஏவுகணைகளையும், துல்லியமாக வழிநடத்தும் குண்டுகளையும் அனுப்பும் திறன்கொண்ட ஒரு விமானத்தைத்தான் தேடுகிறது என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Next Story