தங்கம் கடத்தல் வழக்கில் முதல்-மந்திரியை காப்பாற்ற கூட்டு சதி: கேரள எதிர்க்கட்சி தலைவர்
சுவப்னா சுரேஷின் புதிய குற்றச்சாட்டின் அடிப்படையில் தங்கம் கடத்தல் வழக்கில் முதல்-மந்திரியை காப்பாற்ற முயற்சி நடந்தது தெரியவந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.
சிவசங்கர் சுயசரிதை
கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைதான சுவப்னா சுரேசுடன் நெருக்கமாக இருந்தவர், முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர். இந்த வழக்கில் அவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருந்தார்.
இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த அவருக்கு மீண்டும் தற்போது அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில், தங்கம் கடத்தல் வழக்கின் மூலம் தனக்கு சுவப்னா சுரேஷ் துரோகம் செய்து விட்டதாகவும், அவர் தனக்கு துரோகம் செய்வார் என கனவில் கூட நினைக்கவில்லை. மேலும் அவர் தனக்கு அன்பளிப்பாக தந்த ஐபோன் வழக்கின் போக்கையே மாற்றியதுடன் எனக்கு எதிராகவும் திசை திருப்பப்பட்டது. அவருடன் 3 ஆண்டுகள் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
சுவப்னா சுரேஷ் பேட்டி
இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்றுமுன்தினம் சுவப்னா சுரேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் வாழ்வின் ஒரு அங்கம் நான். என்னை பற்றி அவர் வெளியிட உள்ள சுயசரிதை புத்தகத்தில் தவறான தகவல்களை எழுதி இருந்தால் அது எனக்கு அவர் செய்யும் மோசடி. அவருக்கே அவர் செய்யும் துரோகம். அவரது மனசாட்சியே அதற்கு இடம் அளிக்காது.
சிவசங்கருக்கு பரிசாகவும், பணமாகவும் ஏராளமான உதவிகள் செய்துள்ளேன். சிவசங்கருடன் பெங்களூரு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏராளமான முறை பயணம் செய்து உள்ளேன். தூதரக பார்சலை விமான நிலையத்தில் இருந்து மீட்பது தொடர்பாக சிவசங்கரிடம் விவரத்தை கூறியபோது அதனை கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக அவர் உறுதி அளித்திருந்தார். ஆனால் அதனை தற்போது மறுப்பது மக்களை ஏமாற்றும் செயல். ஒரு கட்டத்தில் விருப்ப ஓய்வு எடுத்து துபாயில் இருவரும் தனியாக வாழ்க்கை நடத்தலாம் என சிவசங்கர் என்னிடம் கூறினார்.
பரபரப்பு குற்றச்சாட்டு
ஆனால் அதனை நான் மறுத்து விட்டேன். அமீரக தூதரகம் மூலம் பல முறைகேடான செயல் நடப்பது சிவசங்கருக்கு தெரியும், அதன் காரணமாகவே அங்கிருந்து அவரது சிபாரிசின் பேரில் கேரள ஸ்பேஸ் பார்க்கில் கன்சல்டன்டாக பணியில் சேர்ந்தேன். சிவசங்கர் எழுதிய சுயசரிதை புத்தகத்தில் என்ன உள்ளது என்பது எனக்கு தெரியாது. அது வெளி வரட்டும், பின்னர் அது குறித்து தெரிவிக்கிறேன். மேலும் அவர் எழுதியதை போல், நானும் சுயசரிதை எழுதினால், சிவசங்கரின் சுயசரிதம் அனைத்தையும் நான் எழுத வேண்டியது இருக்கும்.
மேலும் தங்கம் கடத்தல் வழக்கில், தன்னை தீவிரவாதியாக்கி என்.ஐ.ஏ.விடம் சிக்க வைத்ததில் சிவசங்கர் தான் மூளையாக செயல்பட்டுள்ளார். தங்கம் கடத்தல் வழக்கில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து அமீரக பார்சலை கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது சிவசங்கர் தான். மேலும் அந்த பார்சலில் தங்கம் இருப்பதும் அவருக்கு தெரியும். தெரிந்து கொண்டு தான் அவர் அந்த முயற்சியில் இறங்கினார். ஜெயிலில் இருந்த போது, நான் பேசியது தொடர்பாக வெளியான ஆடியோ ஒரு திரைக்கதை, அதனை கச்சிதமாக செய்து முடித்ததும் சிவசங்கர் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் வழக்கு சூடுபிடித்தது
சுவப்னா சுரேஷின் இந்த புதிய குற்றச்சாட்டுகளால் மீண்டும் தங்கம் கடத்தல் வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. எனவே இதுதொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத் துறையினர் ஆலோசித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேரள எதிர்க்கட்சி தலைவர் சதீசன் கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-மந்திரியை காப்பாற்ற முயற்சி
தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக சுவப்னா சுரேஷ் வெளியிட்டுள்ள தகவல்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்-மந்திரியின் தலைமை அலுவலகத்தில் சமூக விரோத செயல்கள், தேச துரோக குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் இவையாவும் மிக கச்சிதமாக நடந்து இருப்பது தெள்ளத்தெளிவாக ெதரிய வந்துள்ளது. தங்கம் கடத்தலில் முதல்-மந்திரிக்கு தொடர்பு இல்லை என்று சுவப்னா சுரேஷ் கூறியதாக ெவளியான ஆடியோ போலியானது என்பது உறுதியாகி உள்ளது. அதனை முதல்-மந்திரியும் அவரது அலுவலகமும் நிராகரிக்க முடியாது.
முதல்-மந்திரியை இந்த வழக்கில் நிரபராதி என மக்கள் மத்தியில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த மாநில காவல்துறை செயலாற்றி இருக்கிறது. ஆடியோ வெளியிட்ட சம்பவத்தில் நடைபெற்ற கூட்டு சதி குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். யாருடைய தலைமையில் இந்த கூட்டு சதி நடந்தது என்பதும் விசாரிக்கப்பட வேண்டும். மூடி முடக்கப்பட்ட உண்மைகள் ஒவ்வொன்றாக தற்போது வெளிவந்து கொண்டு இருக்கிறது. லைப்மிஷன் இலவச வீடு திட்டத்தில் நடந்த முறைகேடுகள் உண்மை என்பது நிரூபணம் ஆகி உள்ளது. தங்கம் கடத்தல் தொடர்பாக முதல்-மந்திரியின் அலுவலகத்திற்கு நன்றாக தெரியும். இது தொடர்பாக முதல்-மந்திரியின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் கேரள பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் அளித்த பேட்டியில், தங்கம் கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயனை காப்பாற்ற முயற்சி நடந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.
Related Tags :
Next Story