ராகுல் காந்தி மீதான வழக்கு 10-ந்தேதி முதல் நாள்தோறும் விசாரணை: பிவண்டி கோர்ட்டு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான ஆர்.எஸ்.எஸ். அவதூறு வழக்கு விசாரணை வருகிற 10-ந் தேதி முதல் நாள் தோறும் விசாரணை நடத்தப்படும் என பிவண்டி கோர்ட்டு அறிவித்துள்ளது.
அவதூறு வழக்கு
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2014-ம் ஆண்டு பிவண்டியில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் மகாத்மா காந்தியின் கொலைக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக பேசினார்.
இந்தநிலையில் ராகுல்காந்தியின் இந்த பேச்சு ஆர்.எஸ்.எஸ். பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் மீது ராஜேஷ் குந்தே என்ற தொண்டர், தானே மாவட்ட கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 29-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் விதித்துள்ள உத்தரவை சுட்டிக்காட்டிய மாஜிஸ்திரேட்டு, ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு அதே பிரிவில் வரும் என்பதால் 5-ந் தேதி முதல் ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணை நாள்தோறும் நடத்தப்படும் என தெரிவித்தார்.
10-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
இதன்படி இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரர் ராஜேஷ் குண்டேவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியூர் சென்று இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதேபோல ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கோவா, பஞ்சாப், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பணிகளில் தனது கட்சிக்காரர் மும்முரமாக இருப்பதாக கூறினார்.
இதையடுத்து இரு தரப்பு வாதத்தையும் கேட்டுக்கொண்ட பிவண்டி கோர்ட்டு, வழக்கின் விசாரணை வருகிற 10-ந்தேதி முதல் நாள்தோறும் நடத்தப்படும் என கூறி விசாரணையை ஒத்திவைத்தது.
Related Tags :
Next Story