கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரூ.73 ஆயிரம் கோடி நிதி - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரூ.73 ஆயிரம் கோடி நிதி - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Feb 2022 12:40 AM IST (Updated: 12 Feb 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.73 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது என்று பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மாநிலங்களவையில் பதில் அளித்துப்பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட், ஒரு தொடர்ச்சியை குறிக்கிறது. இது பொருளாதாரத்தில் நிலைத்தன்மை, வரிவிதிப்பு முன்கணிப்பு ஆகியவற்றை கொண்டு வருகிறது.

பட்ஜெட்டின் நோக்கம், பொருளாதாரத்தில் நிலையான, நீடித்து நிற்கத்தக்க மீட்புதான்.

2008-09 நிதி நெருக்கடியின்போது சில்லரை பணவீக்க விகிதம் 9.1 சதவீதமாக இருந்தது. இருப்பினும், பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிற கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் அது 6.2 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது.

2008-09 உலகப்பொருளாதார வீழ்ச்சியின்போது, ரூ.2.12 லட்சம் கோடி இழப்பை சந்தித்தது. தற்போது கொரோனா நெருக்கடியில் இது ரூ.9.57 லட்சம் கோடி இழப்பை சந்தித்திருக்கிறது.

வருவாயை விட மூலதன செலவினம் அதிகப்பெருக்கத்தை அளிக்கிறது. எனவே பொருளாதாரத்தை பெருக்குவதற்காக பொது மூலதன செலவினத்தை அரசு அதிகரித்துள்ளது.

பொருளாதார ஆய்வு அறிக்கையிலும், பட்ஜெட் ஆவணங்களிலும் வெவ்வேறு அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், தரவுகளின் ஆதாரங்கள் மாறுபட்டிருப்பதின் விளைவு இது.

ரூ.7.5 லட்சம் கோடி செலவில் வேலை வாய்ப்புகள் உருவாகும். 14 துறைகளுக்கான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட ஊக்க திட்டத்தில் வேலை வாய்ப்பு என்பது 60 லட்சம் மட்டுமல்ல.

(100 நாள் வேலைத்திட்டமான) மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத்திட்டம் ஏமாற்று கணக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பிறக்காத மக்கள்கூட பணம் பெறுகிறார்கள்.

இந்த திட்டமானது, கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு குறைந்த பருவத்தில் வேலைகளை வழங்குவதற்கான ஒரு கோரிக்கை உந்துதல் திட்டமாக அமைந்துள்ளது.

இந்த திட்டத்துக்கு ரூ.73 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. தேவை ஏற்பட்டால் கூடுதலாக வழங்குவோம்.

குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் பொது முடக்கம் காரணமாகத்தான் இத்தகைய 67 சதவீத நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

பணவீக்க மேலாண்மை வலுவாக இருக்கிறது. 2014 முதல் 6 முறை பணவீக்கத்துக்கான 6 சதவீத சகிப்புத்தன்மை வரம்பு மீறி உள்ளதை இந்தியா கண்டிருக்கிறது.

7 ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதாரம் ரூ.1.1 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.2.32 லட்சம் கோடியாக உள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் 9.2 சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்கிறபோது, பொருளாதார மந்த நிலை என்ற கேள்விக்கே இடம் இல்லை.

கிரிப்டோ கரன்சியைப் பொறுத்தமட்டில் அது பற்றிய ஆலோசனைக்குப் பின்னர் தடை செய்வதா, வேண்டாமா என்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.

இது சட்டப்படியானதா இல்லையா என்பது வேறு கேள்வி. ஆனால் வரிவிதிப்பது என்பது இறையாண்மை உரிமை என்பதால் அதற்கு வரி விதிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story