அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்ததற்கு எதிரான மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு, எதிர் மனுதாரர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
முன்பு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் அளிக்கப்பட்டன.
அந்தப் புகார்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் கடந்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த புகார்தாரர்கள், பணத்தை திருப்பி பெற்றுக்கொண்டதாக தெரிவித்தனர்.
அதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி சேலத்தைச் சேர்ந்த தர்மராஜ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் பாலாஜி ஸ்ரீனிவாசன் கடந்த டிசம்பர் 1-ந் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தர்மராஜ் சார்பில் மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன் ஆஜராகி, சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பணம் வாங்கியதையும் கொடுத்ததையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இருப்பினும் இந்த வழக்கை ஐகோர்ட்டு, விசாரணை கோர்ட்டுக்கு அனுப்பாமல் ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு ஊழியர் தொடர்புடைய ஊழல், லஞ்ச வழக்குகளில் உடன்பாடு எட்டியபிறகு அந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு, கியான் சிங் எதிர் பஞ்சாப் அரசு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது என வாதிட்டார்.
அந்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், எதிர் மனுதாரர்களான பி.சண்முகம், கே.அருள்மணி, தமிழக அரசு (சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்) பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 1-ந் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story