இதுதான் மனிதாபிமானம்...! சிறுமியை காக்க ஓடும் ரெயிலுக்கு நடுவில் குதித்தவர்- சிலிர்க்க வைக்கும் வீடியோ


இதுதான் மனிதாபிமானம்...! சிறுமியை காக்க ஓடும் ரெயிலுக்கு நடுவில் குதித்தவர்- சிலிர்க்க வைக்கும்  வீடியோ
x
தினத்தந்தி 12 Feb 2022 12:56 PM GMT (Updated: 2022-02-12T18:26:37+05:30)

இந்த வீடியோவை பார்க்கும் பலரும், தன் உயிரைப் பற்றி கவலைப்பட்டாமல் சிறுமியை காப்பாற்றிய முகமது மெஹபூவை பாராட்டி வருகின்றனர்.

போபால்,

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பர்கேடி பகுதியில் அமைந்துள்ள  தொழிற்சாலையில் தச்சராக வேலைபார்த்து வருபவர்  முகமது மெஹபூப் என்பவர், இவர் கடந்த வாரம்  வேலைமுடிந்து  திரும்பி கொண்டிருந்தார். அப்போது  தண்டவாளம் ஒன்றை கடப்பதற்காக காத்திருந்தார். 

அப்போது பெற்றோருடன் ரெயில் பாதையை கடக்க முயன்ற சிறுமி, தண்டவாளத்தில் தவறி விழுந்து விட்டார். அந்த சமயம் பார்த்து சரக்கு ரயில் ஒன்றும் சிறுமி விழுந்துள்ள தண்டவாளத்தில் வேகமாக வந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். திகைத்து நின்ற பார்வையாளர்களுக்கு மத்தியில் முகமது மெஹபூப், தனது உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல்  துணிச்சலாக தண்டவாளத்திற்குள் குதித்தார் ஊர்ந்த படியே சென்று சிறுமியை தண்டவாளத்திற்கு நடுவில் இழுத்துப்போட்டார்.

தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்க முடியாமல் தவித்த சிறுமியின் தலையை நன்றாக அழுத்தி பிடித்துக் கொண்டார். ஏனென்றால் அந்த நேரம் ரெயில் அவர்கள் இருவரையும் கடந்து சென்று கொண்டிருந்தது, அப்போது பயத்திலோ, பதற்றத்திலோ சிறுமி தலையை தூக்கினால் பெரும் அசம்பாவிதம் நேர்ந்திருக்கும். எனவே தான் சிறுமியின் உயிரை காப்பதற்காக முகமது மெஹபூப் அவ்வாறு செய்தார்.

இந்த  காட்சிகள் அங்கிருந்தவர்களால் பதிவு செய்யப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் பலரும், தன் உயிரைப் பற்றி கவலைப்பட்டாமல் சிறுமியை காப்பாற்றிய  முகமது மெஹபூவை பாராட்டி வருகின்றனர்.


Next Story