மராட்டிய முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை
ரூ.100 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக நாக்பூரில் அனில்தேஷ்முக்கிற்கு தொடர்புடைய 12 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
மும்பை,
முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உள்துறை மந்திரியாக இருந்த அனில்தேஷ்முக் மீது ரூ.100 கோடி ஊழல் புகாரை கூறினார். இந்த புகார் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அனில்தேஷ்முக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
எனவே அனில்தேஷ்முக் பதவி விலகினார். இதே ஊழல் குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையும் அனில்தேஷ்முக்கிற்கு எதிராக பணப்பரிமாற்ற வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு தற்போது ஜெயிலில் உள்ளார்.
இந்தநிலையில் அனில்தேஷ்முக் மீதான ஊழல் வழக்கு குறித்து விசாரணை நடத்த டெல்லி, மும்பையில் இருந்து நேற்று இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் நாக்பூர் சென்றனர். அவர்கள் இன்று அனில்தேஷ்முக்கிற்கு தொடர்புடைய பட்டயக்கணக்காளர்களின் (சி.ஏ.) வீடு, அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் இன்று நாக்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக அனில்தேஷ்முக்கிற்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story