அரிதிலும் அரிதானது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்தது


அரிதிலும் அரிதானது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்தது
x
தினத்தந்தி 13 Feb 2022 2:45 AM IST (Updated: 13 Feb 2022 2:45 AM IST)
t-max-icont-min-icon

12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அரிதிலும் அரிதான பிரம்ம கமலம் பூ, சென்னையில் பஞ்சாப் குடும்பத்தினரின் மூலிகை தோட்டத்தில் பூத்தது.

சென்னை,

பிரம்ம கமலம் பூக்கள் இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும். இந்த பூ நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும். இந்த பூவின் வாசம் அந்த பகுதியையே ஈர்க்கும் வல்லமை கொண்டது. இந்த பூவில் இருந்துதான் பிரம்மன் தோன்றினார் என்றும் கூறப்படுவது உண்டு. இந்த பூ அரிதிலும் அரிதானவை.

இமயமலை பகுதிகளில் இந்த மலர் அதிகம் காணப்படும். உத்தரகாண்டின் மாநில மலரும் இது தான். இந்த பூ 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்த பூ பூக்கும்போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை ஆகும்.

இந்தநிலையில் சென்னை முகப்பேரில் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜஸ்வந்த்சிங் (வயது 59) என்பவரின் வீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள மூலிகை பூங்காவில் அரிதான பிரம்ம கமலம் பூ பூத்தது.

நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக பூத்த இந்த மலர், நள்ளிரவில் முழுமையாக பூத்தது. பின்னர் அதிகாலையிலேயே வாடியது. இந்த பூ பூக்கும்போது அதன் பிரகாசத்தை கண்டும், சொக்கவைக்கும் அதன் நறுமணத்தை நுகர்ந்தும் அக்கம்பக்கத்தினர் பூரித்து போனார்கள். மனதுக்குள்ளேயே பலவாறு வேண்டிக்கொண்டனர்.

இந்த அதிசய பூ குறித்து ஜஸ்வந்த்சிங் கூறியதாவது:-

கடந்த 38 வருடங்களாக என் வீட்டு வளாகத்தில் பல்வேறு மூலிகைகள், காய்கறி, பழ மரங்கள் என ஆயிரத்துக்கும் அதிகமான செடி, கொடி, மரங்களை வளர்த்து வருகிறேன். இதில் 2 பிரம்ம கமல செடிகளும் அடங்கும். கடந்த 2000-ம் ஆண்டு இச்செடியில் நள்ளிரவில் பூ பூத்தது. அப்போது அதை சரியாக கவனிக்க தவறிவிட்டேன். எனவே இம்முறை மிகவும் கவனமாக இருந்தேன். நாட்களை சரியாக கணக்கிட்டும் வந்தேன்.

இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக செடியில் மொட்டு முளைத்தது. எனவே ஒவ்வொரு நாளும் ஆர்வமுடன் கண்காணித்தேன். எதிர்பார்த்தபடியே மிகச்சரியாக நேற்று முன்தினம் நள்ளிரவு பூ பூத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த சமயம் ‘கொரோனா நீங்கி உலக மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்’ என்று மனதார வேண்டிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜஸ்வந்த்சிங் பிறந்தது சென்னையில்தான். தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ் மொழியை எழுத, படிக்க கற்றுக்கொண்டார். அதேவேளை இயற்கையுடன் ஒன்றி வாழவேண்டும் என்ற விருப்பத்தில் வீட்டின் வளாகத்திலேயே செடி-கொடிகள், அரிய மூலிகைகள் கொண்ட பூங்காவை ஏற்படுத்தினார். இவரது மனைவி மொகிந்தர் கவுர், மகன் தரண்ஜித் சிங், மகள் சரண்தீப் கவுர் ஆகியோரும் இவரின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

தற்போது முகப்பேரிலேயே ஒரு மினி தாவரவியல் பூங்காவாக தனது இல்லத்தை அவர் மாற்றியிருக்கிறார். வீட்டின் மாடியில் பேரீட்சை, திராட்சை, தென்னை, ஆரஞ்சு, புளூபெர்ரி, சவுக்கு மரங்கள் வைத்து பராமரிக்கிறார். ஏராளமான குருவிகள் இந்த மாடி தோட்டத்திலேயே தங்கி விளையாடி மகிழ்கின்றன. தாவர கழிவுகளில் இருந்து பயோ-கியாஸ் மூலம் எரிவாயுவும் தயாரித்து பயன்படுத்துகின்றனர்.

Next Story