ஊழல் குற்றச்சாட்டு: நேபாள சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பணியிடை நீக்கம்
ஊழல் குற்றச்சாட்டில் பதவி நீக்க தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நேபாள சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காத்மாண்டு,
நேபாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வருபவர் சோழேந்திர ஷம்ஷர் ஜேபி ராணா. அந்த நாட்டில் 2 ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஷேர் பகதூரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்கிற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியவர் இவர்தான்.
இந்த சூழலில் ஷேர் பகதூர் மந்திரி சபையில் தலைமை நீதிபதி ராணாவின் உறவுக்காரர் மந்திரியாக நியமிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ராணாவின் உறவுக்காரர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதே சமயம் தலைமை நீதிபதி ராணாவுக்கு எதிராக அந்த நாட்டின் பார்கவுன்சில் போராட்டத்தை தொடங்கியது.
ராணா பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாகவும், எனவே அவர் பதவி விலக வேண்டும் எனவும் கூறி பார்கவுன்சில் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேபாள சட்டமந்திரி திலேந்திர பிரசாத் பாது உள்பட ஆளும் கூட்டணியை சேர்ந்த 98 எம்.பி.க்கள் தலைமை நீதிபதி ராணாவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தில் அவர் மீது 21 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த தீர்மானம் மீது விரைவில் ஓட்டெடுப்பு நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேபாள அரசியலமைப்பு சட்டத்தின்படி தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் பதிவு செய்யப்பட்டால், உடனடியாக அவர் பணி இடைநீக்கம் செய்யப்படுவார். அதன்படி தலைமை நீதிபதி ராணா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story