மலம்புழாவில் மலையேற்றம் செல்ல தடை வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு


மலம்புழாவில் மலையேற்றம் செல்ல தடை வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2022 3:44 AM IST (Updated: 15 Feb 2022 3:44 AM IST)
t-max-icont-min-icon

மலைமுகட்டில் இளைஞர் சிக்கியது எதிரொலியாக மலம்புழாவில் மலையேற்றம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.


பாலக்காடு,

மலைமுகட்டில் இளைஞர் சிக்கியது எதிரொலியாக மலம்புழாவில் மலையேற்றம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அங்கு வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் செராடு மலை உள்ளது. இந்த மலையில் மலையேற்றம் சென்றபோது பாபு (வயது 23) என்ற இளைஞர் தவறி விழுந்தார். அப்போது அவர் அதிர்ஷ்டவசமாக மலை முகடு ஒன்றில் சிக்கினார்.

அவரை மீட்க முதல்-மந்திரி பினராயி விஜயன் நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியும் தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் போராடி 43 மணி நேரத்துக்கு பின்னர் இளைஞர் பாபுவை மீட்டனர். இதற்கு ரூ.1 கோடி செலவாகி உள்ளதாக கேரள அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இந்த மலையில் சிலர் மலையேற்றம் செல்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிலர் தீப்பந்தத்தை வைத்து நடந்து செல்வதை கண்டுபிடித்தனர்.

உடனே வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.

பின்னர் அவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த மலைபகுதியில் மலையேற்றம் செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மலம்புழா மலையில் மலையேற்றம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே யாரும் அங்கு செல்லக்கூடாது.

இதைத்தடுக்க இந்த மலைக்கு செல்லும் 4 பாதைகளிலும் வனத்துறையினர் நியமிக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே யாரும் மலையேற்றம் செய்ய வேண்டாம். மீறி யாராவது சென்றால் அவர்கள் மீது வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்ைக எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story