இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக் கடன் மோசடி: ஏபிஜி ஷிப்யார்டு உரிமையாளர்களுக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ்


இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக் கடன் மோசடி:  ஏபிஜி ஷிப்யார்டு உரிமையாளர்களுக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ்
x
தினத்தந்தி 15 Feb 2022 8:27 PM IST (Updated: 15 Feb 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

நாட்டின் மிகப் பெரிய வங்கி கடன் மோசடியாக கருதப்படும் ஏபிஜி ஷிப்யார்டு வங்கி மோசடி வழக்கில் அதன் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மும்பை சேர்ந்த கப்பல் கட்டும் நிறுவனம், ஏ.பி.ஜி. ஷிப்யார்டு ஆகும். இந்த நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளங்கள் குஜராத்தில் டேஹேஜிலும், சூரத்திலும் உள்ளன. இந்த நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.2,925 கோடி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் ரூ.7,089 கோடி, ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.3,634 கோடி, பரோடா வங்கியில் ரூ.1,614 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.1,244 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.1,228 கோடி உள்பட வங்கிகளில் ரூ.22 ஆயிரத்து 842 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக 2019 நவம்பர் 8-ந் தேதி பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு சி.பி.ஐ.யிடம் புகார் செய்தது. அதன்பேரில் சி.பி.ஐ. அந்த அமைப்பிடம் 2020 மார்ச் 12-ந் தேதி சில விளக்கங்களை கேட்டது. அதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஆகஸ்டு மாதம் புதிய புகார் மனு, சி.பி.ஐ.யிடம் வழங்கப்பட்டது.

அதன் பேரில் ஏ.பி.ஜி.ஷிப்யார்டு நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ரிஷி கமலேஷ் அகர்வால், செயல் இயக்குனர் சந்தானம் முத்துசாமி, இயக்குனர்கள் அஷ்வினி குமார், சுஷில்குமார் அகர்வால், ரவி விமல் நிவேதியா மற்றும் இன்னொரு நிறுவனமான ஏ.பி.ஜி.இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மீது குற்றச்சதி, ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, அதிகாரிகளை தவறாக பயன்படுத்தி துஷ்பிரயோகம் ெசய்தல் தொடர்பான இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவுகள் மற்றும் ஊழல் தடுப்பூ சட்டத்தின் பிரிவுகள்கீழ் கடந்த 7-ந் தேதி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.சி.பி.ஐ. பதிவு செய்துள்ள மிகப்பெரிய வங்கி மோசடி வழக்கு இதுதான் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிபிஐ பிறப்பித்துள்ளது. வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்கும் நோக்கத்தில் இந்த லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும். 


Next Story