ஊழியருக்கு புதிய பென்ஸ் ரக காரை பரிசளித்து மகிழ்ந்த முதலாளி
22 ஆண்டுகளாக பணியாற்றிய ஊழியருக்கு புதிய பென்ஸ் ரக காரை முதலாளி ஒருவர் பரிசளித்து உள்ளார்.
கொச்சி,
கேரளாவில் வீட்டு உபயோக பொருட்களுக்கான சில்லரை விற்பனை நிறுவனம் நடத்தி வருபவர் ஏ.கே. ஷாஜி. இவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் சி.ஆர். அனீஷ் என்பவருக்கு புதிய பென்ஸ் ஜி.எல்.ஏ. கிளாஸ் 220டி ரக கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
இதன் மதிப்பு ரூ.45 லட்சம் ஆகும். கடந்த 22 ஆண்டுகளாக ஷாஜிக்கு உறுதுணையாக, அனீஷ் இருந்துள்ளார். அவர், நிறுவனம் துவங்குவதற்கு முன்பிருந்தே உடனிருந்து உள்ளார். சந்தைப்படுத்துதல், பராமரிப்பு மற்றும் வர்த்தக வளர்ச்சி ஆகிய பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனீஷ், முதன்மை வர்த்தக வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிறுவனம் ஆனது கேரளா முழுவதும் 100 இடங்களில் பரந்து விரிந்துள்ளது. இதுபற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ஷாஜி, அனீஷ் ஒருபோதும் என்னை மன வருத்தம் அடைய செய்தது இல்லை. அவருடைய சகோதர பாசம் மற்றும் பணியில் அர்ப்பணிப்பு ஆகியவை எனக்கு பெரிதும் ஆதரவாக இருந்தது.
அனீஷை என்னுடைய பார்ட்னராகவே நினைத்தேன். ஊழியராக அல்ல என தெரிவித்து உள்ளார்.
ஷாஜி தனது ஊழியருக்கு கார் பரிசளிப்பது இது முதன்முறையல்ல. 2 ஆண்டுகளுக்கு முன், தன்னுடைய ஊழியர்கள் 6 பேருக்கு கார்களை பரிசளித்து உள்ளார். இந்த பரிசுகள் தவிர, ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயணம் செய்வதற்கான பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
Related Tags :
Next Story