தடுப்பூசி விஷயத்தில் உலகமே இந்தியாவை பாராட்டுகிறது: கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி
தடுப்பூசி விஷயத்தில் உலகமே இந்தியாவை பாராட்டுகிறது என்று சட்டசபையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
குறை கூறினர்
கர்நாடக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பா.ஜனதா உறுப்பினர் ராஜீவ் தாக்கல் செய்தார். அதன் மீது அவர் பேசும்போது கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா காலத்தில் மாநில அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு அவற்றை நிர்வகித்தது. அதனால் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். மத்திய அரசு தடுப்பூசி வழங்கியதை அடுத்து கர்நாடகத்தில் 100 சதவீதம் பேருக்கு முதல் டோசும், 85 சதவீதம் பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி வந்தபோது, அதை காங்கிரசார் குறை கூறினர்.
பிரதமர் மோடி
அது பா.ஜனதா தடுப்பூசி, மோடி தடுப்பூசி என்று ஏளனம் பேசினர். அதனால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்கினர். ஆனால் இன்று நாட்டில் 160 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். கர்நாடகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இவ்வாறு ராஜீவ் பேசினார்.
அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் யு.டி.காதர் குறுக்கிட்டு, "தடுப்பூசி விஷயத்தில் அரசியலை இழுக்க வேண்டாம். இங்கு மக்கள் பாதிக்கப்பட்டபோது, நீங்கள் தொடக்கத்தில் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள். அது சரியா?" என்றார்.
அனைவருக்கும் தெரியும்
அதைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரியங்க் கார்கே, "கொரோனா பரவிய தொடங்கியபோது, பிரதமர் மோடி கை தட்டுங்கள், தீபம் ஏற்றுங்கள், மணி அடியுங்கள் என்று கூறினார். கொரோனா பரவலை தடுக்க இது என்ன அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளா?" என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், "கர்நாடகத்தில் முதல் டோஸ் 100 சதவீதம் பேருக்கும், 2 டோஸ் 85 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. தடுப்பூசியை தொடக்கத்தில் எதிர்த்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். வளர்ந்த நாடுகளில் கூட இன்னும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படவில்லை. 37 நாடுகளில் 10 சதவீதம் பேர் தான் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். இந்தியாவில் 160 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது வரலாற்று சாதனை. தடுப்பூசி விஷயத்தில் ஒட்டுமொத்த உலகமே இந்தியாவை பாராட்டுகிறது. இன்று மக்கள் தடுப்பூசியை நம்புகிறார்கள்" என்றார்.
Related Tags :
Next Story