மந்திரி ஈஸ்வரப்பா பேச்சுக்கு எதிர்ப்பு: கர்நாடக சட்டசபையில் விடிய விடியத் தங்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா...!
மந்திரி ஈஸ்வரப்பாவின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக சட்டசபையிலேயே விடிய விடியத் தங்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு:
டெல்லி செங்கோட்யைில் ஒரு நாள் காவி கொடி பறக்கும் என்று மந்திரி ஈசுவரப்பா கூறினார். இது தேசத்துரோகம் என்று கூறி வரும் காங்கிரஸ், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக சட்டசபை கூட்டத்தில் கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் தர்ணா நடத்தி வருகிறது. இதனால் சபை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இந்த நிலையில் மந்திரி ஈசுவரப்பாவை நீக்க கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று இரவிலும் சட்டசபைக்குள் தர்ணா நடத்தினர். அவர்கள் அங்கேயே படுத்து தூங்கினர். அவர்களுக்கு தேவையான உணவு, தேநீர், காபி உள்ளிட்டவை ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.
இதன் மூலம் ஈசுவரப்பா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சட்டசபையில் இன்றும் வெள்ளிக்கிழமை தர்ணா நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினர் சட்டசபையில் இரவிலும் போராட்டம் நடத்திய நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் சட்டசபை இன்றும் முடங்கும் நிலை ஏற்படும். சனி, ஞாயிறு விடுமுறை வருவதால், சட்டசபை வருகிற 21-ந் தேதி ஒத்திவைக்கப்பட உள்ளது.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, சபாநாயகர் காகேரி, சட்டம்-சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி ஆகியோர் விதான சவுதாவுக்கு வந்து சித்தராமையாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு நேர தர்ணா போராட்டத்தை கைவிடுமாறு அவர்கள் கேட்டு கொண்டனர். அதற்கு பதிலளித்த சித்தராமையா, தங்கள் மீது அக்கறை செலுத்தி இங்கு வந்து பேசியதற்கு நன்றி, ஆனால் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
Related Tags :
Next Story