ஹிஜாப் விவகாரம்: விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தது கர்நாடக ஐகோர்ட்
கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வின் முன்னிலையில் இன்று 6-வது நாளாக விசாரணை நடைபெற்றது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் சீருடை தவிர ஹிஜாப்-காவி துண்டு உள்ளிட்ட ஆடைகளை அணிய தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து கர்நாடக ஐகோர்ட்டில் முஸ்லிம் மாணவிகள், தங்களை ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிட கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் மீது கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவிட்ட ஐகோர்ட்டு, மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புக்கு வர தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வின் முன்னிலையில் இன்று 6-வது நாளாக விசாரணை நடைபெற்றது. இதில், அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நாவதகி வாதிடுகையில், இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான ஒன்று இல்லை. எனவே ஹிஜாப் அணிவதை தடுப்பது அரசியல் சாசனத்தின் அட்டவணை 25-ஐ மீறுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது” என வாதிட்டார்.
இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என்று கர்நாடக ஐகோர்ட் தெரிவித்தது. அன்றைய தினம் அட்வகேட் ஜெனரல் தனது வாதத்தை முன்வைக்க உள்ளார்.
Related Tags :
Next Story